''வன விலங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கு'' – பட்டாசு வெடிக்காத கிராமம்

முதுமலை வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக பட்டாசுகளை வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஜாதி, மத பேதமின்றி அனைத்துவித மக்களும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் பட்டாசு சத்தங்களை காதை துளைக்கின்றன. ஆனால், முதுமலை புலிகள் காப்பக அடர் வனப்பகுதிக்குள் வசிக்கக் கூடிய கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை அறவே தவிர்த்து வருகின்றனர்.
image
முதுமலை புலிகள் காப்பக அடர் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள முதுகுளி, நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளை சர்வ சாதாரணமாக காண முடியும். ஊரே தீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி வரும் நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வன விலங்குகளின் நலனைக் கருதி பட்டாசுகளை வெடிப்பதை முழுவதுமாக தவிர்த்து இருக்கிறார்கள்.
இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது… வனத்தை ஒட்டி வசிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் பசுமை தீபாவளியாக கொண்டாடச் சொல்லி வனத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், எங்கள் கிராம மக்கள் பல ஆண்டுகளாகவே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகிறோம். அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிப்பதால் இங்கு உள்ள பறவைகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே அதனை தவிர்க்கும் விதமாகவே பட்டாசுகளை வெடிக்காமல் இருக்கிறோம்.
image
வனப் பகுதியில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்தே எங்கள் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.