குஜராத் | விபத்து நேரிட்ட இடத்தில் பிரதமர் இன்று ஆய்வு – ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு நேரில் சென்று, ஆய்வு செய்கிறார். குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், “இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரஷ்ய மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல, அமெரிக்கா, இலங்கை, நேபாளம், சவுதி அரேபியா உட்பட நாடுகளின் தலைவர்கள், தூதரகங்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பரஸ்பரம் புகார்: மோர்பி மாநகராட்சி தலைமை அதிகாரி சந்தீப் கூறும்போது, “மாநகராட்சியின் தகுதிச் சான்று பெறாமலேயே ஒரிவா நிறுவனம் தொங்கு பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டுள்ளது. பாலத்தில் ஆய்வு நடத்தப்பட்டிருந்தால், குறைபாடுகள் களையப்பட்டிருக்கும்” என்றார். ஒரிவா நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, தொங்கு பாலம் திறப்பு குறித்து முறையாக அறிவிப்பு வெளியிட்டோம். மாநகராட்சி நிர்வாகம் அப்போதே ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்னர்.

தொங்கு பாலம் பராமரிப்புப் பணியை ஒரிவா நிறுவனத்துக்கு வழங்க மோர்பி மாவட்ட ஆட்சியர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதை மீறி மாநகராட்சி நிர்வாகம் ஒரிவா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரிவா நிறுவனம் கடிகாரம், மின் விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானத் துறையில் அனுபவம் இல்லாத அந்நிறுவனத்துக்கு தொங்கு பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், ஒரிவா நிறுவனத் தலைவர் ஜெய்சுக் படேல், குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.