ஆசிரியர் பக்கம்

மின்சார வாகனங்கள் மீதான சந்தேகம் ஒரு சாராருக்கு நிறைய இருக்கிறது. மின்சார வாகனத்தை மட்டும் சார்ந்திருக்க முடியுமா என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆனால், இன்னொரு சாரார் மின்சார வாகனங்களின் பக்கம் வேகமாக நகர்ந்து வருகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாகன உற்பத்தியாளர்களும் சுறுசுறுப்பாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே ஒரு மிகப் பெரிய தொழிலாக உருவெடுக்கும் என்று தொழில் ஆர்வலர்கள் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் மோட்டல்கள், ஓட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றைத் தாண்டி, சார்ஜிங் வசதியைப் பல இடங்களிலும் விரிவுபடுத்த தனியார் நிறுவனங்களும் களம் இறங்கி வருகின்றன. இவர்களுக்கு கார் மற்றும் பைக் உற்பத்தியாளர்கள் உறுதுணையாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

வாகன உற்பத்தியாளர்களால் தொழில் ஆர்வலர்களும், தொழில் ஆர்வலர்களால் வாகன உற்பத்தியாளர்களும், இந்த இரண்டு தரப்பினரால் வாடிக்கையாளர்களும் பயன் அடைவதற்கான சமிக்ஞைகள் பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

நேரடியாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறவர்கள் பாதி பெட்ரோல், பாதி பேட்டரி என்று ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கையில் எடுப்பவர்கள், அதிலும் ஒரு படி ஆழமாகச் சென்று மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட், ஸ்மார்ட் ஹைபிரிட் என்று (Internal Combustion Engine) ICE age-க்கும் மின்சார யுகத்துக்கும் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்கள் என்று பலரும், உலகத்தை மின்சார வாகனங்களின் வேகமான வருகைக்கு வடம் பிடிக்கிறார்கள்.

இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் டாடா டியாகோ எலெக்ட்ரிக், BYD அட்டோ 3, பென்ஸ் EQS 580, ஹீரோ விடா மற்றும் ஓலா S1 Air போன்ற பல வாகனங்கள் மின்சார வாகனங்கள் என்பதே, மின்சார வாகனங்கள் நம் வாழ்க்கையை நோக்கி எவ்வளவு வேகமாக வந்து கொண்டிருக்கின்றன என்பதற்குச் சாட்சி.

மின்சாரத்தின் வேகம் என்பது ஒளியின் வேகத்துக்கு ஒப்பானது. மின்சார வாகனங்களின் வருகையும் நாம் கணித்ததை விட வேகமாகவே இருக்கும் என்பதற்கு அடையாளமாக ஒரு சில தரவுகளை ஓலா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் இப்போது 100 ஸ்கூட்டர்கள் விற்பனையானால் அதில் 15 ஸ்கூட்டர்கள் மின்சார ஸ்கூட்டர்களாக இருக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக பெருநகரங்களைப் பொறுத்தவரை நூற்றுக்கு 40 ஸ்கூட்டர்கள் EV ஸ்கூட்டர்களாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு, `ஐஸ் ஏஜ் (ICE Age) நாம் நினைத்ததைவிட வேகமாக முடிவுக்கு வரும்’ என்று கணித்திருக்கிறது.

டாடா டியாகோ EV-யின் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் பத்தாயிரம் பேர் அதற்கு முன்பணம் கட்டிவிட்டார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது ஓலாவின் கணிப்பு சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.