இம்ரான் மீதான தாக்குதலை கண்டித்து பாக்., முழுதும் வெடித்தது போராட்டம்

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்டதை கண்டித்து, அவரது கட்சியினர் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், 70, பாகிஸ்தான் தெஹரீப் இ இன்சாப் என்ற கட்சியை துவங்கி, பிரதமரானார். கடந்த ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தோல்விஅடைந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு ஆகஸ்டில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி, இம்ரான் கான் கட்சி சார்பில் பாக்., முழுதும் பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணி பஞ்சாப் மாகாணத்தின் வாசிராபாதை நேற்று முன்தினம் அடைந்தபோது, மர்ம நபர் சுட்டதில் இம்ரான் கான் காயமடைந்தார். அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்ரான் கான் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து, அவரது கட்சியினர் நேற்று நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் நகரங்களில் நடந்த போராட்டத்தின் போது, போலீசாருக்கும், இம்ரான் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லாகூரில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இம்ரான் கட்சியினர், கவர்னர் மாளிகையின் ‘கேட்’ மீது ஏறி குதித்து உள்ளே நுழைய முயன்றனர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

இதற்கிடையே, இம்ரான் கான் லாகூரில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எக்காரணத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என இம்ரான் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

இது, இம்ரான் கானை ஒழித்துக் கட்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி. தானியங்கி துப்பாக்கியால் மிக அருகில் இருந்து சுட்டுள்ளனர்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் சனதுல்லா, ராணுவ அதிகாரி பைசல் நாசிர் ஆகியோர் தான் இந்த சதிக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்களை பதவி நீக்காத வரை, எந்த விசாரணையும் நேர்மையாக நடக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், இம்ரான் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைக்கும்படி பஞ்சாப் மாகாண அரசுக்கு, பாக்., அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே போலீசார் கூறியதாவது:

இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் நவீத் முகமது பஷீர். இவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அவருக்கு துப்பாக்கி மற்றும் குண்டுகள் விற்பனை செய்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.