நெமிலி ஒன்றியத்தில் அபாயகரமான பள்ளி கட்டிடம் இடிக்கப்படுமா?

*மாணவ, மாணவிகள் அச்சம்

நெமிலி : நெமிலி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை உடனடியாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து  இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள  பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி  கட்டிடங்களை அப்புறப்படுத்தாமல் மழையில் நனைந்து வகுப்பறைகளில் தண்ணீர் வந்து மாணவர்களின் உயிர் பயத்துடன் பாடம் படித்து வருகின்ற அவல நிலை உள்ளது.

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 35 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி 1993-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் ஆன இந்தப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்கனவே விபத்துக்குள்ளானது.
இதனை சீரமைக்க அதிகாரிகளுக்கு பலமுறை ஆசிரியர்கள் தகவல் கொடுத்தும் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதனால், ஆசிரியர்கள் மரத்தடியில் மழை ஈரத்தில் அமர வைத்து பாடம் நடத்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:எங்களது குழந்தைகளை உயிர் பயத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டும் பள்ளிக்கு வந்து ஆய்வு நடத்துகின்றனர். கடைசியாக ஆய்வு செய்து,4 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால் பள்ளி மேல் தளத்தில் இருந்து மழை நீர் வருகிறது. பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்துக்குள் பாடம் எடுக்க முடியாமல் மரத்தடியில் பாடம் எடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியத்தால் கட்டிடங்களை சீரமைக்க முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் உயிர் பயத்துடன் வந்து பாடம் பயின்று வருகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை தர வேண்டும். அதுவரை மற்றொரு இடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கிடப்பில் போடப்பட்ட தீர்மானம்

நெமிலி ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள 40 அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நெமிலி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 4 மாதம் ஆகிறது. ஆனால் தற்போது வரை முழுமையாக பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புற படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.