சர்ச்சையில் கேரள பெண் ஐ.ஏ.எஸ்.,| Dinamalar

திருவனந்தபுரம் :கேரளாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலெக்டர் திவ்யா, தன் குழந்தையுடன் வந்ததும், குழந்தையை துாக்கி வைத்தபடி மேடையில் பேசியதும், சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர், திவ்யா எஸ் அய்யர். சமீபத்தில் பத்தனம்திட்டாவில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திவ்யா, தன் 3 வயது ஆண் குழந்தையுடன் வந்திருந்தார். மேலும், மேடையில் பேசியபோது, குழந்தையை கையில் துாக்கி வைத்தபடி பேசினார்.

இந்த விவகாரம் கேரளாவில் கடும் விமர்சனத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நிகழச்சிக்கு ஏற்பாடு செய்தவரும், கேரள சட்டசபை துணை சபாநாயகருமான கோபகுமார் கூறியதாவது:பொது இடங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தன் பொறுப்பை உணராமல் திவ்யா செயல்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி குழந்தையுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்தாலும், குழந்தையை மேடைக்கு அழைத்துச் செல்வதும், குழந்தையை கையில் பிடித்தபடி மேடையில் பேசுவதும், அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவரது செயல்பாடு, விழாவின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் பலரும், திவ்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திவ்யாவின் கணவரும், காங்., பிரமுகருமான சபரிநாதன் கூறியதாவது:

அந்த நிகழ்ச்சி அரசு ஏற்பாடு செய்தது அல்ல; தனியார் நிகழ்ச்சி. விடுமுறை அன்று நடந்த நிகழ்ச்சி என்பதால், திவ்யா குழந்தையை அழைத்துச் சென்றார். வேலைக்கு செல்லும் தாய்களுக்கு ஏற்படும் சிரமம் தெரியாதவர்கள் தான், இதை விமர்சிக்கின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், 2018ல் ஐக்கிய நாடுகள் சபையில் பேச வந்தபோது, தன் மூன்று மாத குழந்தையையும் சபைக்கு துாக்கி வந்திருந்தார் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.