“அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது மனுஸ்மிருதி”- விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

பாவலர் தமிழன்பன் எழுதிய `சமூகநீதி – சமூகங்களின் காவலன்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை அசோக் நகர் விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி நூலை வெளியிட, விசிக தலைவர் திருமாவளவன் அதை பெற்றுக் கொண்டார்.

பாவலர் ஆ.பா.தமிழன்பன் அவர்கள் எழுதியுள்ள
‘சமூகநீதிச் சமூகங்களின் காவலன்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். #Thiruma_BookRelease pic.twitter.com/g1aUFAf4ZZ
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 5, 2022

தொடர்ந்து, நிகழ்வில் பேசிய திருமாவளவன், “ ‘சமூக நீதி – சமூகங்களின் ஒற்றுமை’ என்பதை முதன் முதலாக நாம் சொல்ல துணிந்த போது தோழர்கள் குழப்பமடைந்தனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால், பிராமணர்களை தவிர நாம் தான் பெரும்பான்மையாக இருப்போம் என்பதை சொல்வது தான் பகுஜன்.
image
நமக்கு வேறு வேறு அடையாளங்கள் இருக்கலாம். நாம் வலுப்பெற வேண்டும் என்றால், சமூக நீதி என்பது தேவை. அந்த சமூக நீதி என்பது, சிறுபான்மை, பட்டியலினம், இதர சமூகங்களுக்கும் தேவை. SC, ST என்பவர்கள் கூட பிற்படுத்தபட்டோர் தான். இவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் அடிப்படையாக தேவை படுகிறது. கல்வியும், அதிகாரமும், வேலைவாய்ப்பும் ஒரு கோட்பாட்டுடன் தொடர்புடையது. அதுதான் சமூக நீதி. ஒரு கட்டமைப்பு உருவாவதற்கு கோட்பாடு என்பது தேவைப்படுகிறது. ஒரு கோட்பாட்டை பின்பற்றுவதற்கு ஒரு குடும்பமும், சமூக அமைப்பும் காரணமாக ஆகிறது.
image
சமூக நீதி என்கிற கோட்பாட்டிற்கு இந்த மண்ணில் பேராபத்து உருவாகி உள்ளது. ஒருவேளை சமூக நீதி குழி தோண்டி புதைகபட்டால், பிறகு ஜனநாயகம் இருக்காது, சமத்துவம் இருக்காது. ஜனநாயகத்தை மூன்று சொற்களாக பிரித்து கொள்ளலாம். அவை – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள். ஜனநாயகம் இல்லை என்றால் சமூக நீதி வீணாகிவிடும். அப்படி ஆகிவிட்டால் பாலின பாகுபாடு என்பதை தகர்த்தெறிய முடியாது. அந்த தேவையின் அடிப்படையில் தான் வெறும் SC, ST மற்றும் OBC இன் ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது.
image
இத்தனை ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்டுக்கொண்டிருப்பது மனு தர்மம் தான். இன்றும் உச்சநீதிமன்றத்தில் சத்திரியர்கள் நீதிபதியாக முடியாது. பிராமணர்கள் மட்டுமே 90% உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கிறார்கள். பிராமணர்கள் என்பது சாதியல்ல. பிராமணர் என்பது வர்ணத்தின் பெயர். எப்படி எல்லா தொழிலிலும் உயர் பதவிகளில் பிராமணர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
அதேநேரம் மனுஸ்மிருதி, பிராமணப் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் மிகவும் இழிவுபடுத்துகிறது. பெண்களை மட்டுமல்ல… சூத்திரர்களையும் மிகவும் மோசமாக கட்டமைக்கிறது மனுதர்மம். இவையெல்லாம் மனுதர்மத்தில் இருப்பதாக அம்பேத்கர் தொகுத்துள்ள நூலில் குறிப்பிட்டுள்ளவை. ஆனால் இவர்கள் அம்பேத்கரையே தங்கள் வசப்படுத்தப்பார்க்கிறார்கள்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.