ஒன்டைம் செட்டில்மென்ட்டில் கால நீட்டிப்பு கேட்க உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஒன்டைம் சென்ட்டில்மென்ட்டில் (ஒருமுறை தீர்வு திட்டம்) கடன் வாங்கியவர் கால நீட்டிப்பு கேட்பதற்கு உரிமை கோர முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று வாங்கிய கடனை திருப்பி செலுத்த எஸ்பிஐ வங்கியுடன் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்துள்ளது. இதன்படி, கடன் பாக்கியில் 25 சதவீதத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 21ல் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து 6 மாதத்தில் செலுத்தி விடுவதாகவும் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதன்பிறகு மீதமுள்ள தொகை ரூ.2.52 கோடியை திருப்பி செலுத்த 8 முதல் 9 மாதங்கள் வரை கால நீட்டிப்பு கோரியது. இதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது.

இதை எதிர்த்து கடன்தாரர், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒன்டைம் செட்டில்மென்ட் திட்டத்தின் கீழ் கட்டணத்தை மாற்றி அமைப்பது, கால நீட்டிப்பு வழங்குவது என்பது மீண்டும் ஒப்பந்தத்தை மாற்றி எழுதுவதற்கு சமம். ஆகவே, இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்த பிறகு கடனாளி கால நீட்டிப்பு கேட்க எந்த உரிமையும் இல்லை. இரு தரப்பும் சம்மதிக்கும் பட்சத்தில் கால நீட்டிப்பு வழங்கப்படலாம். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். அடுத்த 6 வாரத்தில் சம்மந்தப்பட்ட கடன் பெற்ற நிறுவனம் வட்டியுடன் நிலுவைத் தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.