தொடர்ந்து வாங்க மத்திய அரசு முடிவு| Dinamalar

மாஸ்கோ, ”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். எனவே, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,இரண்டு நாள் பயணமாக ரஷ்யா வந்து வந்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவுக்கு வந்த அவர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.

இதன் பின் ஜெய்சங்கர் கூறியதாவது:

இந்த ஆண்டில் இது, எங்களது ஐந்தாவது சந்திப்பு. ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்னைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, எங்களது சந்திப்பு இருக்கும்.

சர்வதேச நிலைமையை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, வர்த்தகபிரச்னைகள் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கு மேலாக, உக்ரைன் — ரஷ்யா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை இப்போது பார்க்கிறோம். உக்ரைன் – – ரஷ்யா இடையேயான மோதலை பொறுத்தவரை, இருதரப்பினரும் உடனடியாக பேச்சு நடத்த வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

‘இது, போருக்கான காலம் அல்ல’ என, பிரதமர் மோடி கூறியதை, தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம். எனவே, இதை இந்தியா தொடர்ந்து செய்யும். குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது; அதற்கு இந்த சந்திப்பு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.