டெல்லியில் பெண்கள் மதுகுடிப்பது 37% அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து உள்ளது. டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்பு ஊரடங்கு அமலான சூழலில், டெல்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளது என தெரிய வந்துள்ளது. இதுபற்றி 5 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், கடந்த 3 ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்து உள்ளது என 37.6 சதவீத பெண்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

நிறைய சில்லரை விலை கடைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை மற்றும் தள்ளுபடி ஆகியவை அதிக அளவில் மதுபானம் வாங்குவதற்கான காரணங்கள் என 77% டெல்லி பெண்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், மன உளைச்சல் ஆகியவற்றை மறக்க இந்த பழக்கம் அவர்களிடம் அதிகரித்து உள்ளது. இதில், மனஅழுத்தத்தினால் பெண்களிடையே இந்த விகிதம் 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. அவர்களில் 7 சதவீதம் பேர் தீங்கு தரும் அளவில் குடிக்கு அடிமையான விஷயமும் தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர், ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் குடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது என்றும் ஆய்வு அதிர்ச்சி தெரிவிக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.