இன்று மோடி, நாளை அமித் ஷா… கசியும் அரசியல் சீக்ரெட்… தமிழகத்தில் பாஜக மெகா டார்கெட்!

பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தான் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. இதிலென்ன சுவாரஸியம் என்கிறீர்களா? நாளைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவுள்ளார். இரண்டே நாட்களில் பாஜகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இரு புள்ளிகள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருவதை அரசியல் கண் கொண்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பாஜகவை பொறுத்தவரை அடுத்த இலக்கு 2024 மக்களவை தேர்தல். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் வடக்கு பெரிதும் கைகொடுத்த நிலையில், தெற்கு ஏமாற்றமே அளித்தது. இதனை மாற்றிக் காட்டும் வகையில் தான் அடுத்து வரும் தேர்தல் மீது கவனத்தை குவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் தற்போதே களப்பணிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தி சத்தமே இல்லாமல் ”டார்கெட் சவுத்” என்ற ஆபரேஷனை களமிறக்கி விட்டுள்ளனர். அதாவது தெற்கில் வலுவாக காலூன்ற வேண்டும். செல்வாக்கு குறைந்து காணப்படும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கான அச்சாரமாக தான் ஹைதராபாத் கூட்டம். தெற்கு என்றாலே பாஜகவிற்கு கசக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தால் தாமரை மலருவதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களை பிடித்து டெல்லியின் கவனத்தை தமிழக பாஜக ஈர்த்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கை போதாது. பெரிய இலக்கை நோக்கி ஓடுங்கள் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தான் 2024 மக்களவை தேர்தலில் டெல்லியின் வழிகாட்டுதலுடன் தமிழக பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு மத்திய பாஜக அமைச்சர்கள் தொடர்ச்சியாக வருகை புரிய வேண்டும். ஏதாவதொரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அரசின் நலத்திட்ட செயல்பாடுகளை பார்வையிட வேண்டும். இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநில பாஜக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி சரியான வியூகம் வகுத்து கொடுப்பதே டெல்லியின் இலக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அந்த திட்டத்தின் படியே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என இரண்டு நாட்களில் அடுத்தடுத்து தமிழகம் வருகின்றனர். இதன்மூலம் மத்திய அரசிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி வரும் 2024 மக்களவை தேர்தலுக்காக “டார்கெட் 25” என்ற ஆபரேஷனை நோக்கி ரகசியமாக காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.

குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்கள், கோவை, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்கள் என 25 மக்களவை தொகுதிகளை குறிவைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சார வியூகம், சந்திப்புகள் என பெரிய லிஸ்ட்டையே போட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இவற்றில் எப்படியும் 8 தொகுதிகளில் வென்று தாமரையின் செல்வாக்கை திராவிட கட்சிகளுக்கு காட்டிவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விஷயம் எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகப் போகிறது? வேறு ஏதேனும் அரசியலும் அரங்கேறப் போகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.