ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

புதுடெல்லி,

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.

பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.