விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க வனப்பகுதிக்குள் மூங்கில் கன்றுகள் வளர்க்க கோரிக்கை

பழநி: விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க வனப்பகுதிகளில் மூங்கில் கன்றுகள் வளர்க்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டிய மலைகிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக யானைக்கூட்டம் புகுந்து அப்பகுதியில் விளைவிக்கப்பட்டிருக்கும் மா, தென்னை, வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை நாசம் செய்தும், அப்பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தள்ளியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த விவசாயிகள் மாலைவேளைகளில் இருப்பிடம் தேடி உள்ளூர் அகதிகளாக ஊருக்குள் வந்துவிடுகின்றனர்.

இந்த யானைகளின் அட்டகாசத்தை தடுக்க அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளைப் பயன்படுத்துதல், பட்டாசுகள் வெடித்தல், அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். எனினும் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் சோலார் மின்வேலியை சரிவரப் பராமரிக்காததால் வேலியை உடைத்துக்கொண்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் மீண்டும் புகுந்துவிட்டன. எனவே யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க வனப்பகுதிக்குள் மூங்கில் கன்றுகள் நடவு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் யானைகள் உணவருந்த மூங்கில் போன்றவகளை வளர்க்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து பாலசமுத்திரம் விவசாயி மயில்சாமி கூறுகையில், ‘‘யானைகள் வனப்பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வனப்பகுதிக்குள் தடுப்பணை, கீழ்நிலை குடிநீர் தொட்டி போன்றவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதுபோல் உணவுக்காக மூங்கில், பூவரசன், குமுது மற்றும் நாசல் போன்றவைகளையும் வளர்க்க வனத்துறையினர் முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.