‘கல்லை எடுக்கச்சொன்னா கிட்னியையே எடுத்துட்டாங்க’ -தனியார் மருத்துவமனைமீது அதிர்ச்சி புகார்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுநீரகத்தில் இருந்த கல்லை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபரிடம் இருந்து சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லா தால் கிராமத்தைச் சேர்ந்தவர் 53 வயதான சுரேஷ் சந்திரா. இவர் அங்கு வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நீண்டகாலமாக அடிவயிற்றில் வலி இருந்ததை அடுத்து கஸ்கஞ்ச்சில் உள்ள தனியார் மருத்துவப் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவருக்கு இடதுபக்க சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவப் பரிசோதனை மையத்தில் பணம் செலுத்துமிடத்தில் (Bill Counter) இருந்த நபர் ஒருவர், அலிகார் குரேஷி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு, சுரேஷ் சந்திராவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அவரின் பேச்சை நம்பி சுரேஷ் சந்திராவும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துவிட்டு பின்னர், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை அனுமதித்துள்ளனர். அத்துடன் அந்த நாளே அவருக்கு சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவைசிகிச்சையும் நடந்துள்ளது. அதன்பிறகு சுரேஷ் சந்திராவிடம், சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டதாக கூறிய மருத்துவர்கள், சில மருந்துகளை கொடுத்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சுரேஷ் சந்திராவை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மீண்டும் அடிவயிற்றில் வலிவர கஸ்கஞ்ச்சில் உள்ள மருத்துவர் ஒருவரை, தனது பழைய மருத்துவப் பரிசோதனை தகவல்களுடன் சென்று பார்த்துள்ளார் சுரேஷ் சந்திரா. அப்போது அவரை பரிசோதித்த அந்த மருத்துவர், வயிற்றுப் பகுதியின் இடதுபக்கத்தில் நீண்ட கிடைமட்டக்கோடு போன்ற தையல் தழும்பு இருப்பதைக் கண்டு சுரேஷ் சந்திராவிடம் அதுபற்றி கேட்டுள்ளார். பின்னர் உடனடியாக அந்த மருத்துவர், சுரேஷ் சந்திராவை ஸ்கேன் செய்யக்கோரி அனுப்பியுள்ளார்.
image
ஸ்கேன் எடுத்துப் பார்த்தப் பிறகுதான், தனது இடதுபக்க சிறுநீரகம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் சந்திரா, உடனடியாக அறுவை சிகிக்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை தொடர்புக் கொண்டு கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து அவர்கள் பதிலளிக்காததை அடுத்து, உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் சுரேஷ் சந்திரா. இதுதொடர்பாக கஸ்கஞ்ச்லில் உள்ள சிடிஓ அதிகாரியான சச்சின் தெரிவிக்கையில், தலைமை மருத்துவ அதிகாரி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை வரை இந்த பிரச்னை சென்ற பிறகுதான் தற்போது இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.
முதலில் ஏப்ரல் 15-ம் தேதி தான் சிறுநீரகக்கல் நீக்க அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருந்ததாகவும், ஆனால் தனது உறவினர்கள் வரும்வரை பொறுத்திருக்க முடியாது என மறுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஏப்ரல் 14-ம் தேதியே அறுவைசிகிச்சை மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்திரா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, தான் மயக்கநிலையில் இருந்ததால், மருத்துவர் யார் என்று சரியாக பார்க்கவில்லை என்றும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை என்னை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சிகிச்சைக்காக ரூ. 28,000 பணம் செலுத்திய பின்னரே மருத்துவமனையில் இருந்து தன்னை வீட்டுக்கு அனுப்பியதாகவும், தனியார் மருத்துவமனை மீது அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.