கேரளா மாணவியின் 4 வருட படிப்பு செலவை ஏற்ற அல்லு அர்ஜுன்

கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நான்கு வருட செவிலியர் படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லை. அவரது தந்தையும் கொரோனா காலகட்டத்தில் காலமாகிவிட்டார். அதை தொடர்ந்து நேரடியாக ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து இதுகுறித்து தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். கலெக்டர் கிருஷ்ண தேஜா அந்த மாணவியின் கண்களில் தெரிந்த உறுதியையும் நம்பிக்கையையும் பார்த்து 'வி ஆர் பார் ஆலப்பி ப்ராஜெக்ட்' என்கிற திட்டத்தின் கீழ் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பல கல்லூரிகளில் விசாரித்ததில் ஒரு தனியார் கல்லூரியில் அவருக்கு இடம் கொடுக்க முன்வந்தார்கள். அதேசமயம் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள ஒரு ஸ்பான்ஸர் தேவை என்கிற நிலை வந்தபோது கலெக்டர் கிருஷ்ண தேஜா ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தகவல் தெரிவித்தார்.

அதை கேட்டதும் அல்லு அர்ஜுன் மறுநிமிடமே அந்த மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டாராம். அதுமட்டுமல்ல ஒரு வருட செலவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்படி கலெக்டர் கோரிக்கை வைத்த நிலையில் அந்த மாணவியின் நான்கு வருட படிப்பு செலவு, விடுதியில் தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்தையுமே தான் ஏற்றுக்கொள்வதாக பெருந்தன்மையுடன் கூறிவிட்டாராம்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விரிவாக பதிவிட்டு அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்துள்ள கலெக்டர் கிருஷ்ண தேஜா, அந்த மாணவி நிச்சயம் நன்றாக படித்து ஒரு செவிலியர் ஆக மாறி தனது குடும்பத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்திற்கு நிச்சயம் நல்லது செய்வார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர்களை பொறுத்தவரை கேரளாவில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு மாணவியின் படிப்புக்கு உதவும் அவரது இந்த நல்ல குணத்தை அவரது கேரள ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.