முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை: 6 பேர் விடுதலைக்கு காங், எதிர்ப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது

இந்நிலையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், ,சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (11) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு  வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையில் இருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பு அளித்திருக்கிறது.

தி.மு.க.வை பொருத்தமட்டில் எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை முதன் முதலில் 2000-ம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான். தமிழக ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்த போதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்கப்பட்டது. பேரறிவாளனை உச்சநீதிமன்றம் முதலில் விடுதலை செய்தது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது இன்று மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்தது இரண்டாம் வெற்றியாக பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்இ ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இந்தியாவின் உணர்வோடு ஒத்துப்போகாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தீர்ப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய தண்டனை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலையாளிகளை யாரும் கொண்டாடுவதை ஏற்க முடியாது. இவர்கள் ஹீரோக்கள் அல்ல” என விமர்சித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.