ICC T20 WC 2022: ஏற்ற இறக்கங்கள் தாண்டி வந்த இரு அணிகள்; பாகிஸ்தான், இங்கிலாந்து கடந்து வந்த பாதை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று என பல அணிகள் பங்குபெற்ற இந்தத் தொடரில் தற்போது பாகிஸ்தானும் இங்கிலாந்தும் மட்டுமே எஞ்சியுள்ளன. இரு அணிகளும் தங்கள் குரூப்பில் இரண்டாவது இடம்பிடித்த அணிகள்தான். முதலிடம் பிடித்த இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்து வெளியேறிவிட்டன. இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே தங்கள் கடைசி லீக் போட்டியில்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். அவர்கள் கடந்து வந்த பாதை எப்படியிருந்தது?

பாகிஸ்தானின் பயணம்:

vs இந்தியா:

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் சற்று பொறுமையான தொடக்கம் தந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆடி 159 ரன்கள் குவித்தது. பின்னர் பந்து வீச்சில் அபாரமாகத் தொடங்கிய பாகிஸ்தான் இந்தியாவை வெற்றிவாய்ப்புகளில் பின்னுக்குத் தள்ளியது. அந்த இடத்திலிருந்து விராட் கோலி, தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

IND vs PAK

vs ஜிம்பாப்வே:

முதல் வெற்றியைத் தேடி போட்டியைத் தொடங்கிய பாகிஸ்தான், நன்றாக பந்து வீசி ஜிம்பாப்வே அணியை 130 ரன்களுக்குள் நிறுத்தியது. ஆனால் பேட்டிங்கில் பாகிஸ்தானால் ஜிம்பாப்வேயின் பந்திவீச்சைத் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. கடைசி ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் தோற்றது பாகிஸ்தான்.

vs நெதர்லாந்து:

அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகள் குறைந்த நிலையில், பாகிஸ்தான் நெதர்லாந்திடம் சிறப்பாகச் செயல்பட்டது. 91 ரன்கள் மட்டுமே அடித்த நெதர்லாந்தின் ஸ்கோரை 14வது ஒவரில் சேஸ் செய்து தொடரின் முதல் வெற்றியை ஒருவழியாகப் பதிவு செய்தது.

vs தென்னாப்பிரிக்கா:

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 ஓவர்கள் முடிவில் 42-4 என்ற பரிதாப நிலையில் இருந்தது. அதன் பின் வந்த பேட்ஸ்மேன்களின் வெறித்தனமான ஆட்டத்தால் 185 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அடுத்து பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அதே 8 ஓவர்கள் முடிவில் 67-4 என்ற நிலையில் இருந்தது. மழையின் குறுக்கிட்டால் 5 ஓவருக்கு 73 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவால் சோபிக்க முடியவில்லை!

Pakistan

vs வங்கதேசம்:

அரையிறுதி வாய்ப்பே இல்லை என்று காலை கண்விழித்திருப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள். ஆனால் அதே நாளில் இந்தப் போட்டிக்கு முன்னர் தென்னாபிரிக்கா நெதர்லாந்திடம் தோற்றது, எல்லாவற்றையும் திருப்பிப் போட்டது. வங்கதேசத்துடன் வெற்றி பெற்றால் அரையிறுதி என்ற சூழ்நிலையை அழகாகக் கையாண்டு அரையிறுதியில் காலடி எடுத்து வைத்தது.

vs நியூசிலாந்து (அரையிறுதி):

நியூசிலாந்தை பெரிய டார்கெட் வைக்கவிடாமால் தடுத்து அருமையாகப் பந்து வீசியது பாகிஸ்தான். பின்னர் அதை மிக எளிதாக சேஸ் செய்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று யாரும் எதிர்பார்க்காததை நிகழ்த்திக் காட்டியது பாகிஸ்தான்.

Babar azam | Rizwan

அதிக ரன்கள்: முகமது ரிஸ்வான் (Runs: 160, SR: 109.6) | அதிக விக்கெட்டுகள்: ஷாஹீன் ஷா அப்ரிடி (Wickets: 10, Economy: 6.17) | அதிக தாக்கம் ஏற்படுத்திய வீரர்: ஷதாப் கான் (Runs: 78, Wickets: 10)

இங்கிலாந்தின் பயணம்:

vs ஆப்கானிஸ்தான்:

தொடரின் முதல் போட்டியிலேயே சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியை 112 ரன்களுக்குச் சுருட்டியது. அதைப் பெரிய தடுமாற்றமின்றி சேஸ் செய்து முதல் வெற்றியைப் பெற்றது.

vs அயர்லாந்து:

முதலில் பேட் செய்த அயர்லாந்து, 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து சற்று பொறுமையாகவே ஆடிவந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் DLS முறைப்படி அயர்லாந்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இங்கிலாந்தை ஆச்சரியப்படுத்தியது.

Buttler

vs ஆஸ்திரேலியா:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மழையால் ரத்தானது. இதனால் அரையிறுதிக்கு நடைபெறும் யுத்தத்தில் சுவாரஸ்யம் அதிகமானது.

vs நியூசிலாந்து:

ஏறக்குறைய வாழ்வா சாவா போட்டியில் களம் இறங்கிய இங்கிலாந்து முதலில் பேட் செய்து 179 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்தால் அதிரடியாக ஆடமுடியவில்லை. இதனால் இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

vs இலங்கை:

வெற்றி பெற்றால் அரையிறுதி, தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேற்றம் என்ற நிலையில் இலங்கையை எதிர்கொண்டது. சிறப்பான இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்ட இலங்கையால் 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதை நிதானமாக சேஸ் செய்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து.

vs இந்தியா (அரையிறுதி):

பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் கலக்கியது இங்கிலாந்து. இந்தியாவை 168 ரன்கள் மட்டுமே அடிக்க விட்ட இங்கிலாந்து, அதை ஒரு விக்கெட் கூட இழக்காமல் மிக எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

Alex Hales

அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸ் (Runs: 211, SR: 148.6) | அதிக விக்கெட்டுகள்: சாம் கரன் (Wickets: 10, Economy: 7.28) | அதிக தாக்கம் ஏற்படுத்திய வீரர்: அலெக்ஸ் ஹேல்ஸ் (Runs: 211, SR: 148.6)

இந்த உலகக்கோப்பையில் இரண்டு அணிகளின் பயணமும் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. அதையெல்லாம் தாண்டி இரு அணிகளும் அரையிறுதியில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர். மெல்பேர்ன் மைதானத்தில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.