“நரகம், சுடுகாடு, சாக்கடை, புதைக்குழி..!" – 32 வருட சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்த நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்குப் பின்னர் வேலூர், காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார் நளினி. அவர் பேசுகையில், ‘‘32 வருஷம் போய்விட்டது. இதுக்கு அப்புறம் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது. அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு இதுவரை 5 பைசாகூட கொடுத்தது கிடையாது. என் வழக்குச் சம்பவத்தில் இறந்துபோன நபர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா, இல்லையா? என்பதையும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

நளினி – முருகன்

‘அப்பா, அம்மா இருவரும் கடைசியில் கிடைத்துவிட்டார்கள்’ என்று என் மகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். ‘நல்லா என்ஜாய் பண்ணுமா. இந்த விடுதலையை சந்தோஷமா ஏத்துக்க’ என்று சொன்னாள். என்னால்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நானும் என் கணவரும் மகளிடம் செல்ல விரும்புகிறோம். தற்போதைய தமிழக ஆளுநர் காவல்துறையில் இருந்தவர். என் வழக்குச் சம்பவத்தில் அவரின் துறையைச் சார்ந்த 7 பேர் இறந்துவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, ஆளுநர் எப்படி எங்களுக்கு விடுதலைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்க முடியும்’’ என்றவரிடம்,

‘‘பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘32 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம். அவர்களுக்கு திருப்தியில்லையா?’’ என்றவரிடம், ‘‘சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்திப்பீர்களா?’’ என்று மற்றொரு கேள்வியை முன்வைத்ததற்கு, ‘‘அய்யோ சாமி! ஆளைவிடுங்க. அவர்களை சந்திக்க வாய்ப்பே இல்லை’’ என்றவர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘சிறையில் இருந்த சமயத்தில், ஐ.ஜி ஒருவரின் உதவியுடன் நான் படித்தேன். அவர்தான் என்னை படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். சிறைச்சாலை அனுபவம் என்பது நரகம், சுடுகாடு, சாக்கடை, புதைக்குழி போல இருந்தது. யாராலும் போக முடியாத பெரிய யூனிவர்சிட்டியும் சிறைதான். அங்கு பொறுமை, நிதானம், மரியாதையாக பேசுவதைக் கற்றுக்கொண்டேன். இனிமேலும் நான் நானாகவே இருக்கப் போகிறேன். தமிழ்நாட்டு மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் கொலைகாரியாக பார்க்கிறீர்களா, என்னைப் பார்த்தால் கொலைகாரியைப் போல தெரிகிறதா? அதுவும் 17 பேர் கொலை! ஆளுக்கொரு கருத்து இருக்கும். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நளினி

சத்தியமாக பொதுவாழ்க்கைக்கு வரமாட்டேன். ஒரு சாதாரண மனுஷியாக என் மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன். என் மகளிடம் கிரீன் கார்டு இருக்கிறது. விரைவில் எங்கள் இருவரையும் அழைத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறாள். சிறையில் இருந்தபோது, ஆன்மிகத்திலும் யோகாவிலும் அதிக நாட்டம் செலுத்தினேன். நேரமே போகாது. இந்த விடுதலையை மிராக்கிளாகவே என் கணவர் முருகன் பார்க்கிறார். இன்னும் தாமதமாகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முயற்சித்துக்கொண்டே இருந்தோம். எழுவர் விடுதலை; திடீரென ஒருவர் விடுதலை என வந்தபோது, உடைந்துபோய்விட்டோம். விடுதலைக்குப் பின்னர் என் கணவர் சொன்னது, ‘நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்தக் கூடாது. நான்தான் உன்னை பார்த்துக்கொள்வேன்’ என்றார். அவர் உள்ளவரை எனக்கு கவலையில்லை’’ என்று நெகிழ்ச்சியடைந்தார் நளினி.

நளினி இன்று காலை சென்னை புறப்படுகிறார். சென்னையில் அவர் தம்பி வீட்டில் தங்கவிருப்பதாகவும், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைத்தப் பின்னர் திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தன் கணவர் முருகனைச் சந்திக்க செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.