பசியோடு உறங்க சென்று, அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்த இந்தியர்…

மேரிலேண்ட்,

மராட்டியத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சிர்சாதி என்ற கிராமத்தில் குர்கெடா என்ற பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி (வயது 44). பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் வறுமை குடி கொண்டிருந்தது. தனது இளமை பருவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹலாமி, எங்களுக்கு என்று சிறிய அளவில் பண்ணை நிலம் இருந்தது.

ஆனால், மழை காலங்களில் அதில் பயிரிட முடியாது. வேலையும் இருக்காது. உண்மையில் வாழ்க்கையை நடத்துவது அதிக கஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாங்கள் போராட வேண்டியிருந்தது என கூறுகிறார்.

இதனால், மகுவா எனப்படும் பூக்களை பறித்து வந்து சமைப்போம். அதனை எளிதில் சாப்பிடவோ, ஜீரணிக்கவோ முடியாது. பர்சோடு எனப்படும் காட்டு அரிசியை சேகரித்து வருவோம். அரிசி மாவை நீரில் கலந்து, வயிற்றை நிரப்ப குடித்து கொள்வோம்.

எங்களுக்கு மட்டும் இந்த நிலைமை என்றில்லை. 90 சதவீத கிராமவாசிகளும் இந்த வகையிலேயே வாழ வேண்டியிருந்தது என நினைவு கூர்கிறார். சிர்சாதி கிராமம், 400 முதல் 500 குடும்பங்களை கொண்டது.

இவரது தந்தை 7-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். அதனால், கசன்சூரில் உள்ள பள்ளியில் சமையல்காரர் வேலை கிடைத்த பின்பு, குடும்பம் அந்த பகுதிக்கு சென்றது. அவர்களது நிலைமையும் சற்று மாறியது.

ஹலாமி, ஆசிரம பள்ளியில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையும், உதவி தொகை தேர்வில் வெற்றி பெற்று, வித்யாநிகேதன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்துள்ளார். கட்சிரோலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி, நாக்பூர் அறிவியல் மையத்தில் எம்.எஸ்சி. ரசாயனம் படித்து முடித்துள்ளார்.

இதன் பின்பு, லட்சுமிநாராயணன் தொழில் நுட்ப மையத்தில் உதவி பேராசிரியராக 2003-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். மராட்டிய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற பின், ஆராய்ச்சி படிப்பில் அவரது கவனம் சென்றது.

அதன்பின் அமெரிக்காவுக்கு சென்று பிஎச்.டி படித்து, டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்த துறையில் சிறந்த விஞ்ஞானியாகி உள்ளார். கடின உழைப்பில், கிடைத்த குறைந்த ஊதியத்தில், தன்னை கல்வி பயில வைத்த தனது பெற்றோருக்கு இந்த வெற்றியை அவர் சமர்ப்பிக்கிறார்.

அவரது பெற்றோர் விரும்பிய சிர்சாதி கிராமத்தில் வீடு ஒன்றை ஹலாமி கட்டியுள்ளார். எனினும், ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை காலமானார்.

சமீபத்தில் கட்சிரோலியில், மாநில பழங்குடியின வளர்ச்சி துறை கூடுதல் ஆணையாளர் ரவீந்திர தாக்ரே, ஹலாமியை அழைத்து கவுரவித்து உள்ளார். அதன்பின் நாக்பூரில் உள்ள பழங்குடி விடுதிக்கும் விருந்தினராக ஹலாமியை அழைத்து சென்று மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கான அறிவுரைகளை வழங்க செய்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் மூத்த விஞ்ஞானியாக ஹலாமி பணியாற்றி வருகிறார். சொந்த ஊரில் உள்ள பள்ளிகள், ஆசிரம பள்ளிகள், கல்லூரிகளுக்கு பயணம் மேற்கொண்டு மாணவர்களை சந்தித்து தொழில் மற்றும் இலக்குகளை அடைவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

தன்னுடைய இளம் வயதில் குடும்பம் கஷ்டப்பட்டபோது, நன்றாக படித்து, இன்று வெளிநாட்டில் விஞ்ஞானியாக பணி செய்து வரும் ஹலாமி இன்றைய மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.