புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டம் – பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகைப்பொருட்கள் வழங்கும் பெரிய திட்டம் ஒன்று தயாராகி வருவதாக பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஏழை மக்களுக்கு உணவு பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 10ம் தேதிக்குள் வரவு வைக்கப்படுகிறது. புதுச்சேரியில் 1.68 லட்சம் சிவப்பு ரேஷன் அட்டைகள் மூலம் 6.74 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடி பணபரிமாற்றத் திட்டத்தின் கீழ் ரூ.700 வரவு வைக்கப்படுகிறது. இதேபோல் மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநில அரசு சார்பில் அரிசிக்கான பணமாக மாதம் தோறும் ரூ.300 தரப்படுகிறது.

அரிசி மட்டுமில்லாமல் மலிவு விலை மளிகைப் பொருட்களை வழங்கும் பெரிய திட்டம் ஒன்றும் தயாராகி வருகிறது. மத்திய அரசு திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் உள்பட அனைத்து திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு சென்றடையும் வகையிலும், விடுபட்டோருக்கு உதவவும் மாநில நிர்வாகிகள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்தவுள்ளோம்.

என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் ஊழல் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசு பணி நியமனங்களில் மிகப் பெரிய முறைகேடுகளும் ஊழலும் நடந்துள்ளன. ஆனால், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு, ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது. காவல்துறை, அங்கன்வாடி பணியிடங்கள் உள்பட பணிநியமனங்களில் முறைகேடாக ஒருவர் பணி வாய்ப்பை பெற்றிருப்பதாக நிரூபித்தாலும் பதவி விலக தயாராக உள்ளோம்” இவ்வாறு சாமிநாதன் குறிப்பிட்டார். பேட்டியின்போது புதுச்சேரி மாநில குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.