மதுரை வைகை ஆற்றில் கரைபுரளும் வெள்ளம் – கரையோர சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்வதால் பெரியாறு, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணைக்கு 1,109 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், அணையின் நீர் மட்டம் 137 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு 5,829 கன அடி தண்ணீர் வருகிறது. அதனால், வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணையில் இருந்து நேற்று முதல் 4,230 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், அதன் கிளை நதிகள் இணைவதாலும், வழித்தடங்களில் பெய்யும் மழைநீர் காரணமாகவும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரை வைகை ஆற்றில் 16,400 கன அடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக மதுரை யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்வதால் கரைகளை ஒட்டிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த சாலைகளில் வாகனப்போக்குவரத்து தடைப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வைகை ஆற்றங்கரை சாலைகளில் செல்ல முடியாமல் நகர சாலைகளில் வந்து சென்றதால் வாகனப் போக்குவரத்து ஸத்ம்பித்தது.

வைகை ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுவதால் மலைப்பிரதேச செம்மன் கலந்த நீராக ஆற்றுநீர் மதுரையில் பெருக்கெடுத்து ஓடியது. ஏ.வி மேம்பாலம், கல் பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆற்று வெள்ளத்தை வேடிக்கைப்பார்த்து சென்றனர். இதனிடையே, கரையோரப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரப்பாளையம் செல்லூர் பாலம் அருகே வைகை ஆற்றில் 4 குதிரைகள் ஒரு மேட்டுப்பகுதியில் சிக்கி கொண்டன. தகவல் அறிந்த தல்லாக்குளம் தீயணைப்பு நிலை அலுவலர் அசோக்குமார், மதுரை நகர் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.

மதுரை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய சாலைகள் முதல் குடியிருப்பு சாலைகள் வரை மழைநீர் பெருக்கெடுத்து வருகிறது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் பாதாளசாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகனப்போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 4 வீடுகள் சேதமடைந்ததை அடுது்து, பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.