ராஜீவ் கொலை வழக்கு: “திருச்சி சிறப்பு முகாமில் நால்வர் உண்ணாவிரதமா?" – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் வேலூர், சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 12-ம் தேதி இரவு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் மீது வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்த பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை முடியும் வரை இந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

சிறப்பு முகாம் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் போலீஸார்

இதைத் தொடர்ந்து, நால்வருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அறை ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான படுக்கை போன்ற எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சிறை வளாகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு, முகாம் நுழைவாயில் பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். சிறைக்கு வருவோா், சிறைக் கைதிகளைப் பாா்க்க வருவோார் என அனைவரும் கடும் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தச் சிறப்பு முகாமில் ஏற்கெனவே உள்ள இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 132 பேருடன் முருகன் உள்ளிட்ட நால்வரும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவா்களில் முருகன், சாந்தன் ஆகியோா் ஓர் அறையிலும், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகியோா் ஓர் அறையிலும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் வைக்கப்பட்டிருக்கின்றனர். முகாமில் ஏற்கெனவே உள்ள வெளிநாட்டுக் கைதிகள் அவ்வப்போது தற்கொலை முயற்சி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். எனவே அவா்களால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முகாம் உள்ளேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்

இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், முகாமினுள் நால்வரும் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. சிறப்பு முகாமுக்கு வருகை தந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நால்வரும் சிறப்பு முகாமினுள் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்பட்ட தகவலில் உண்மையில்லை. முகாமினுள் நடைபயிற்சி செல்ல அனுமதி கேட்டார்கள். அதனையும் கொடுத்திருக்கிறோம். முகாமினுள் இருக்கும் நால்வருடைய சொந்த நாட்டிலிருந்து, ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்னர், அவர்களை அவர்களுடைய நாட்டுக்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.