டெங்கு, மலேரியா வந்தால் திமுகவுக்கு லாபம்: அந்தியூரில் அண்ணாமலை பேச்சு..!

டெங்கு, மலேரியா வந்தால்கூட திமுக நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம் என்று, அந்தியூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் அண்ணாமலை பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி, வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மணல் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகிறார்.

சென்னையில் வெள்ளத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் முதல்வர் தனது மனைவியுடன் சென்று ‘லவ் டுடே’ படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குகிறார். ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கொசு வலை விற்பதற்கு சென்னையில் ஒரு மேயர். கொசு வலையை கூட நம்பி வாங்கி விடக்கூடாது. டெங்கு, மலேரியா வந்தால்கூட திமுக நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம். சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மாத மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.