50 ஆண்டுக்கு பின் நிலவுக்கு ராக்கெட் அமெரிக்காவின் நாசா அனுப்பியது| Dinamalar

கேப் கேனவரால்,நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோதனை விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ நேற்று செலுத்தியது. ‘அப்பல்லோ’ பயணத் திட்டம் முடிவுக்கு வந்து, ௫௦ ஆண்டு முடிந்துள்ள நிலையில் இந்தப் பயணம் நடந்துள்ளது.

நாசா முதன் முதலில் ௧௯௬௯ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ ராக்கெட்கள் வாயிலாக ஐந்து முறை மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆறு பயணங்களில், ௧௨ மனிதர்கள் நிலவில் தங்கள் கால்தடத்தை பதித்தனர்.

இந்த அப்பல்லோ பயணத் திட்டம், ௧௯௭௨ல் முடிவுக்கு வந்தது. கடைசி பயணம் முடிந்து, ௫௦ ஆண்டுகளாகியுள்ள நிலையில், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டது.

ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பயண திட்டத்தின் முதல் ராக்கெட்டான ஆர்டெமிஸ் – ௧ நேற்று செலுத்தப்பட்டது. புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவராலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று புறப்பட்டது.

இதனுடன், ஓரியன் என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மூன்று மாதிரி ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி நிலவில் இந்த மாதிரிகளை இறக்கிய பின், ஓரியன் விண்கலம் அடுத்த மாதத்தில் பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறக்கப்படும்.

வரும் ௨௦௨௪ல் நிலவின் சுற்று வட்ட பாதையிலும், ௨௦௨௫ல் நிலவிலும் மனிதர்களை இறக்க சோதனைகள் நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

கடந்த ௨௦௧௭ல் முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ௫௦ ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதை பார்ப்பதற்காக, கென்னடி விண்வெளி மையத்தில், ௧௫ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர்.

தீப்பிழம்புகளை கக்கி ராக்கெட் புறப்பட்டதும், மக்கள் ஆரவாரமாக கொண்டாடினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.