அனல்மேல் பனித்துளியில் ஆண்ட்ரியாவின் சொந்த வாழ்க்கை சம்பவங்கள்

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆர்.கெய்சர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அனல் மேல் பனித்துளி. ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம் வருகிற 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஆண்ட்ரியா கூறும்போது “நகர்புறத்துக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. எனக்கு 11 வயதிருக்கும்போது வேளாங்கண்ணிக்கு பஸ்சில் சென்றேன். அப்போது பின்னால் இருந்த ஒருவன் எனது சட்டைக்குள் கை நுழைக்க முயற்சித்தான். நான் எழுந்து முன்னால் சென்று உட்கார்ந்து கொண்டேன். ஒரு முறை கல்லூரிக்கு செல்லும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தது. பஸ்சில் பயணிக்க தேவையில்லாதவளாக நான் இப்போது இருக்கிறேன். ஆனால் எல்லா பெண்களுக்கும் அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றித்தான் படம் பேசுகிறது. இந்த சம்பவங்கள் படத்திலும் இடம்பெற்றுள்ளது” என்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ஆர்.கெய்சர் ஆனந்த் கூறுகையில், “கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம். அந்த பிரச்சினைகளை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதும் இந்தக் கதையில் காண்பிக்கப்படுகிறது. இது போன்ற ஒரு வலுவானக் கதையில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம். மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு மனதையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்றும் கதையைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.