இயற்கை மீது குற்றம் சாட்டி தப்பிக்க முடியாது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.10.85 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இயற்கை மீது குற்றம் சாட்டி தப்பிக்க முடியாது எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மின்சாரம் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.10.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் சதுரகிரி, கடந்த 2013ல் வீட்டின் அருகேயுள்ள வாழைத்தோப்புக்கு குளிக்க சென்றார். அப்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கணவர் இறப்பால், வாழ்வாதாரமின்றி சிரமப்படுகிறேன். மின்வாரியத்தின் கவனக்குறைவால் தான் என் கணவர் இறந்துள்ளார். எனவே, உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், ‘‘இயற்கை சீற்றத்தால் தென்னை மரக்கிளை விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு மின்சார வாரியம் பொறுப்பேற்க முடியாது என கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்கள், மழைக்காலங்கள் போன்ற நேரங்களில், மின் கம்பிகள் மற்றும் செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மரக்கிளைகள் விழாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற விபத்துகளுக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. மனுதாரரின் கணவர் இறந்த விவகாரத்தை இயற்கை மீது குற்றம் சாட்டி தப்பிக்க முடியாது. இதற்கு மின்சார வாரியம் தான் பொறுப்பு. எனவே, மனுதாரருக்கு ரூ.10.85 லட்சத்தை உரிய வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.