மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் இன்று முடவன் முழுக்கு; திரளான பக்தர்கள் நீராடினர்

மயிலாடுதுறை: கங்கை முதலான புண்ணிய நதிகள், பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீராடியதால் உண்டான பாவச்சுமைகளின் காரணமாக ஏற்பட்ட கருமை நிறம் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், அப்போது, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி பாவச்சுமைகள் நீங்கி, கருமை நிறம் அகல சிவபெருமான் அருளியதாகவும் ஐதீகம். இந்த ஐதீகத் திருவிழா மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் நடப்பாண்டு ஐப்பசி 1ம் தேதி  தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது. ஐப்பசி 30ம் தேதியையொட்டி நேற்று கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.

இந்நிலையில் இன்று முடவன் முழுக்கு நடந்தது.  ஒரு காலும், கையும் ஊனமுற்ற ஒருவர் மிகுந்த இறைபக்தி கொண்டவர். இவர் ஐப்பசி மாத கடைமுழுக்கில் பங்கேற்க முடிவு செய்தார். இதற்காக மயிலாடுதுறைக்கு வந்த போது, ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது. இதனால் மிகவும் மனம் வெதும்பி இறைவனை நினைத்து கண்ணீர் விட்டார். அப்போது சிவபெருமான் தோன்றி, கவலை வேண்டாம், நதியில் நீராடு, ஐப்பசியில் நீராடிய பயனை பெறுவாய் என்றார். அதை கேட்டு சிலிர்த்த ஊனமுற்றவர், இறைவனை துதித்தபடி காவிரியில் நீராடினார். பின்னர் எழுந்தபோது அவரது ஊனம் நீங்கி பொலிவுடன் திகழ்ந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே கடை முழுக்கில் நீராட முடியாதவர்கள், முடவன் முடக்கிலும் நீராடலாம் என்பதால், இன்று முடவன் முழுக்கு நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.