காசி தமிழ் சங்கமம் விழா உபி.யில் நாளை துவக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெறும் காசி-  தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தில் உள்ள காசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காசிக்கும் (வாரணாசி) தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 17ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழக்கத்தில் நாளை இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் கலாசாரம், கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை நடைபெறும்.

மோடியின் பாலி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்தோனேஷியாவின் பாலியில் நடந்த  ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவில் டிஜிட்டல் அணுகலை அனைவருக்கும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், சர்வதேச அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் இடைவெளி உள்ளது,’ என்றார். இதை எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. திரிணாமுல் காங்கிரசின் டிவிட்டர் பதிவில், ‘டிஜிட்டல் அணுகலுக்கு இந்தியாவை ஊக்குவித்த போதிலும் வேறு எந்த நாட்டையும் விட அடிக்கடி இணையத்தை பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு முடக்குகிறது.

டிஜிட்டல் சர்வாதிகாரம் தொடர்ந்து கருத்து சுதந்திரத்தை தடுக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘2015ம் ஆண்டு முதல், உலகின் இணைய முடக்க தலைநகரமாக இந்தியா உள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இணையதள அணுகல் இல்லை,’  என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.