பவானி டூ மேட்டூர்… மாஸ் பயணத்திற்கு ரெடியாகும் நெடுஞ்சாலை… வேற லெவல் ஈரோடு!

கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நகரம் ஈரோடு. இங்கிருந்து அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல ’மேட்டூர் மெயின் ரோடு’ பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறியுள்ளது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு முதல் பெங்களூரு வரை செல்ல முடியும். இதில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே தொப்பூர், மேட்டூர், பவானி, ஈரோடு ஜீரோ பை ஜீரோ வரை 7 மீட்டராக உள்ள தார் சாலையை பத்து மீட்டர் அகலம் கொண்டதாக மாற்ற முதல்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி சாலையின் இரு பகுதிகளிலும் மொத்தம் மூன்று மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் கடின புருவல்கள் கொண்ட தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொப்பூரில் தொடங்கியது.

தற்போது பவானி, குப்பிச்சிபாளையம், பெரும்பள்ளம், பிளாட்டினம் மஹால் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தனித்தனி ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள இரு புறமும் வளர்ந்துள்ள புளிய மரங்கள் அப்புறப்படுத்தாமல் அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் பவானி நகரப் பகுதியில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் இடையூறாக உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அவை அப்புறப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து விரிவாக்கப் பணிகளும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பவானி முதல் சின்ன பள்ளம், பிளாட்டினம் மஹால் வரையிலான பணிகளுக்கு 85 கோடி ரூபாய் நிதி செலவிடப்படுகிறது. மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் 2, புதிய பாலங்கள் 2 என மொத்தம் 49 பாலங்கள் கட்டப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிவுக்கு வந்தவுடன் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் விபத்துகளும் தவிர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.