இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி ரிண்டா சிறுநீரக செயல் இழப்பால் சாவு: பாக். மருத்துவமனையில் முடிந்தது கதை

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, சிறுநீரக செயலிழந்து இறந்து விட்டதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான  ‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் முக்கிய தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா.  இந்தாண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னணியில்  ரிண்டா  இருப்பது தெரிந்தது.   பாகிஸ்தானில் பதுங்கியிருந்த இவனை இந்தியா தேடி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ரிண்டாவை கொன்று விட்டதாக பாம்பிஹா கும்பல் சமூக வலைதளங்களில்  சமீபத்தில் தெரிவித்தது. ஆனால், சிறுநீரகம்  செயலிழப்பால் அவன் இறந்ததாக இந்திய உளவுத்துறைகள் தெரிவித்துள்ளன.  இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘15 நாட்களுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் ரிண்டா அனுமதிக்கப்பட்டான். சிறுநீரக செயல் இழப்பால், அவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். பஞ்சாபின் தரன் தரன்   மாவட்டத்தைச் சேர்ந்தவன். இந்தியாவில் பல்வேறு குற்றங்களை செய்துள்ளான். போலி பாஸ்போர்ட் மூலமாக நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பினான்,’ என தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.