தமிழகத்தின் முதல் தனியார் செக்போஸ்ட்; கையை பிசையும் போலீஸ்!

திருப்பூர் மாவட்டம் ஊதியூர், காங்கேயம் சுற்று பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே விவசாய பட்டிகளில் அடைக்கப்பட்டு இருந்த செம்மறியாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் பட்டியில் இருந்து 5, 10, 15 என ஃபல்க்காக ஆடு திருட்டு போகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த விவசாயிகள், பட்டியில் நாய்களை காவலுக்கு வைத்த போதும் நாய்களுக்கு மயக்க மருந்து அல்லது சில்லி சிக்கன் வாங்கி போட்டோ அடித்து கொன்று விட்டு நான்கு சக்கர வாகனத்தில் வைத்து ஆடுகள் திருட்டு போவதாக புகார் எழுந்தது.

ஆனாலும் ஊதியூர் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் செம்மறியாடுகள் திருடு போகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது பற்றி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருந்தாலும் திருடர்களை பிடிப்பது போலீசாருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. இதனால் விரக்தி அடைந்த முதலிபாளையம், வாணவராயநல்லூர், அப்பியபாளையம், கொத்தனூர், புங்கந்துறை, சிறுகிணறு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே தாங்களாகவே செக்போஸ்ட்டை அமைத்து காவல் காத்து வருகின்றனர்.

இரவு முழுவதும் சுழற்சி முறையில் விழித்து இருந்து அந்தந்த பகுதிகளில் செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர். சந்தேகப்படும்படியாக வாகனங்களில் செல்வோர் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் இளைஞர்கள் டூ வீலர்களில் ரோந்து செல்கின்றனர். இவர்களை போலவே போலீசாரும் தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கண்காணிப்பால் ஆடு திருட்டு சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்த இது உதவியாக உள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆடுகள் சந்தைகளில் 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விலை போகும் நிலையில் திருட்டை தடுக்க கிராம மக்கள் ஆங்காங்கே செக்போஸ்ட் அமைத்திருப்பது ஒரு வகையில் பார்ப்பதற்கு பாதுகாப்பானது என தோன்றினாலும், கவுரவ குறைச்சலாக உள்ளதால் என்ன செய்வது? என்று புரியாமல், போலீசாரும் கையை பிசைந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.