நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி, கடும் சேதாரமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து, புனே தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”புனே நகரில் உள்ள புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நவாலே மேம்பாலம் அருகே நடந்த பெரிய விபத்தில் சிக்கி, 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. புனே தீயணைப்பு துறை, புனே புனே பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து சம்பவ இடத்தில், மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. 

இந்த விபத்தில், சுமார் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டேங்கர் லாரி ஒரு வாகனத்தின் மீது பலமாக மோதியதே இந்த கொடூர விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 48 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி பலத்த சேதமடைந்துள்ளன.

அந்த டேங்கர் லாரியில் திடீரென பிரேக் பிடிக்காததால், முன்னே சென்ற வாகனத்தில் மோதியுள்ளது. மேலும், சாலையில் எண்ணெய் சிதறி கிடந்த காரணத்தால் லாரிக்கு பின்னால் வந்த வாகனங்களுக்கு சாலை வழுக்கியுள்ளது. எனவே, அந்த வாகனங்கள் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்து இன்னும் பெரிதாகியுள்ளது. இந்த விபத்து, நேற்றிரவு 9 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தினால், சுமார் 2 கி.மீ., நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவாலே மேம்பாலம் விபத்துகள் நடப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று (நவ. 18) இதே நவாலே பாலம் அருகே உள்ள வெளிப்புற சுற்றுச்சாலையில், வேகமாக வந்த கார், ஒரு பெண் மீது மோதியதில் அவர் உயிரிழந்தது நினைவுக்கூரத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.