இந்து மதம் சார்ந்த பிரச்சினைகளில் முதலில் குரல் கொடுப்பது பாஜக – வாரணாசிக்கு ஒன்றிணைந்து வந்த ஆதீனங்கள் பேட்டி

புதுடெல்லி: தமிழகத்தின் ஒன்பது ஆதீனங்கள் முதன்முறையாக ஒன்றிணைந்து, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதன் அனுபவம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு மூன்று மடங்களின் ஆதீனங்கள் சிறப்பு பேட்டி அளித்தனர்.

முதலில் தூத்துக்குடி பெருங்குளத்தின் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசீக சக்திஞான பரமாச்சாரி சுவாமியின் பதில்கள் வருமாறு:

கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழகத்தில் பிரிந்து நிற்கும் நீங்கள், வாரணாசிக்கு ஒன்றாக இணைந்து வந்தது எப்படி?

(வாய்விட்டு சிரிக்கின்றனர்) இது காலத்தின் கட்டாயமாகி விட்டது. தமிழகத்தின் மாறிவிட்ட சூழல் எங்கள் அனைவரையும் ஒன்றாக இணைந்து செயல்பட வைத்துள்ளது.

நீங்கள் ஒன்றாக இணைந்து இந்த சங்கமத்திற்கு வந்ததன் மூலம், தமிழக ஆதீனங்களின் பாதுகாவலன் பாஜக மட்டுமே என தமிழர்களுக்கு உணர்த்த விரும்புகிறீர்களா?

தமிழகத்தை பொறுத்தவரை அதுதான் உண்மை. இந்தநிலை, வட மாநில மடங்களுக்கு எப்படி உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. தமிழகம் மற்றும் கேரளாவில் இந்து மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடியாகக் குரல் கொடுப்பது பாஜக மட்டும்தான். இதை செய்ய மற்ற கட்சிகள் அஞ்சுகின்றன. அப்படி எனில், பாஜகதான் பாதுகாவலனாக உள்ளது என்பது உண்மை. அதிமுக வுக்கு கடவுள் மறுப்புக் கொள்கை இல்லை என்றாலும் அக்கட்சியினர் சில பிரச்சினைகளில் எங்களுக்காக குரல் கொடுப்பதில்லை.

காசி விஸ்வநாதர் கோயிலில் உங்கள் அனைவருக்கும் சிறப்பு மரியாதை செய்திருந்தார்கள். இதன்பிறகு உங்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, ஆதீனங்களை மதிப்பதில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பாக புகார் செய்தது உண்மையா?

உண்மைதான். தமிழகத்தில் இந்து மதம் வளரவேண்டும் என்றால் நம்முடையத் திருக்கோயில்கள் ஆதீனங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். இஸ்லாமியர்களின் மசூதி, தர்காக்கள் வஃக்பு வாரியம் கட்டுப்பாட்டிலும் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் அதன் திருச்சபைகள் கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஆனால் இந்து கோயில்களை மட்டும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை ஏற்க முடியாது.

அப்படியானால், தமிழக கோயில்களின் நிர்வாகங்களை யாரிடம் அளிக்கச் சொல்கிறீர்கள்?

இவற்றை தமிழக ஆதீனங்களான எங்களிடம் முழுமையாக அளித்து விடுங்கள் என நாங்கள் கூறவில்லை. இதற்கு முன் கோயில்களை நிர்வகிக்க வாரியம் எனும் அமைப்பு இருந்தது. இந்த வாரியம் தான் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையாக மாறியது. அந்தமுறையில் மீண்டும் மாற்றப்படுவது அவசியம். அறநிலையத் துறையை சுதந்திரமாக செயல்படும் வாரியமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

வேளாக்குறிச்சி மடத்தின் ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி அளித்த பதில்கள் வருமாறு:

காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்கள் கலந்துகொள்ள வந்ததன் நோக்கம் என்ன?

தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடன் வந்தோம். அதை மெய்ப் பிக்கும் வகையில் நமது பிரதமர் உரை எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளித்துவிட்டது.

இந்த சங்கமத்தில் கலந்துகொண்ட பின் நீங்கள் உணர்வது?

தமிழகத்தின் தொன்மையான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தெற்கு, வடக்கு என்ற பிரிவினை இன்றி ஒருங்கிணைந்த தேசமாக மாறி உள்ளங்களை மகிழ வைத்துள்ளன. இரண்டு முனைகளும் தங்கள் கலாச்சாரங்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாக இது அமைந்தது.

சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மன்னர் காலங்களில் அவர்கள் அரசின் ராஜகுருக்களாக ஆதீன மடங்களில் மாணவர்கள் திகழ்ந்தனர். இச்சூழலில் நம் நாடு முழுவதிலும் அன்றி இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தது. இந்த நிலை தற்போது தமிழகத்திலேயே சுருங்கிப்போனதற்கு காரணம் என்ன?

மன்னர் காலங்களில், வாரணாசி என்பது மகததேசம் என்று அழைக்கப்பட்டது. இதன் சிறப்பு எங்கள் பிள்ளைத் தமிழில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அப்போதும் முக்கியத்துவம் பெற்றிருந்த எங்கள் சைவ மடங்கள் தற்போது சுருங்கிவிட்டதாக எண்ணுவது ஆகாது.

இதற்கு உதாரணம் காசியின் குமரகுருசாமி மடம். எங்கள் திருப்பனந்தாள் மடத்தின் இந்தக் கிளை காசியில் ஏதோ ஒருவகையில் சைவ சித்தாந்தத்தை பரப்பும் பணியை செய்து கொண்டிருக்கிறது.

காசியில் உருவான உங்கள் ஒற்றுமை தமிழகத்தில் நீடிக்குமா?

மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிணக்குகள், தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடைவெளி போன்ற காரணங்களால் இந்த வேற்றுமை இருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் மரபுகளை தகர்த்து கோயில் விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்று வருகிறோம். எனவே, தமிழகத்தில் எங்களிடையே வேற்றுமை இல்லை.

காசி தமிழ்ச் சங்கமம் ஆன்மீகமாநாட்டை போல் காட்சிப்படுத்தப்படுகிறதே?

ஆன்மீகமும் தமிழும் பிரிக்க முடியாதது என்பதுதான் உண்மை. இதேபோல, காசியும் தமிழகமும் பிரிக்க முடியாதது ஆகும். ஆன்மீக இலக்கியங்கள் இல்லை என்றால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தே கிடைத்திருக்காது.

ஆன்மீக இலக்கியங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் நூல்வடிவம் பெற்று அனைத்து மடங்களும் இவற்றை பரப்பத் தொடங்கின. தமிழை வளர்ப்பதற்காக ஒரு சமூகமே இருந்தது. இவர்கள் பிடாரர், தேசியர், ஞானி, தவசி, என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன.

உங்களது பல்லக்கு சவாரிக்கு எதிர்ப்பு கிளம்பியது குறித்து?

சைவர்களின் மரபு சார்ந்த நிகழ்வு அது. இடையில் ஏற்படுத்தப்பட்ட தவறான தகவல்களின் அடிப்படையில் அதற்கு தடை ஏற்பட்டது. இதற்கு ஆதீனங்களும் பொறுப்பல்ல, தமிழக அரசு மீது இதற்காகப் புகார் கூற முடியாது. ஏனெனில், பல்லக்கு தூக்குவதை தடை செய்தது மாவட்ட நிர்வாகங்கள். இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோயம்புத்தூர் தென்சேரி மலையின் திருநாவுக்கரசர் நந்தவனம் திருமடத்தின் ஆதீனம் முத்துசிவராம சுவாமி அளித்த பதில்கள் வருமாறு:

இந்த சங்கமத்தில் உங்களுக்கு கிடைத்த உடனடி பலன் என்ன?

அக்காலங்களில் நாம் அனைவரும் இணைந்து சைவ திருமறை மற்றும் சித்தாந்த மாநாடுகளை ஒன்றிணைந்து நடத்தி வந்தோம். இதை மீண்டும் தொடங்கும் வகையில் காசியின் சங்கமத்தால் முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ்ச் சங்கமத்தின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும்?

மத்திய அரசின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. நிகழ்ச்சி யில் பிரதமர் உரையின் வரலாற்று நினைவுகூரல், இளம் தமிழர்கள் தலைமுறையின் முன் எழுச்சியை ஏற்படுத்தும். இது நாட்டின் ஒற்று மைக்கு பாலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு ஆதீனங்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.