மழையால் ஆட்டம் பாதிப்பு…டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆட்டம் சமன்…நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா…!

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி பிலிப்ஸ் மற்றும் கான்வேயின் அரைசதத்துடன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணியில் இஷன் கிஷன் 10 ரன், பண்ட் 11 ரன், சூர்யகுமார் யாதவ் 13 ரன், ஷ்ரேயஸ் ஐயர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா , தீபக் ஹூடா இணை அனியை சரிவில் இருந்து மீட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்க்ப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. இந்திய அணி 75 ரன்களே எடுத்திருந்தது. இதனால் 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது.

இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2 வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி மழையினால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. 2வது ஆட்ட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.