கூட்டுப் பொறிமுறை ஊடாக இறால் ஏற்றுமதியை   அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

இறால் வளர்ப்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதுடன்,  ஏற்றுமதியையும்  அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இறால் பண்ணையாளர்கள் மற்றும் இறால் குஞ்சுகள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும்  சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24.11.2022)  நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

ஏற்றுமதியாளர்கள், கருத்தரிப்பு நிலைய உரிமையாளர்கள், இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் ஆகிய முத்தரப்பும் ஒன்றிணைந்த கூட்டுப் பொறிமுறை ஊடாக இத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமையில் இறால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு,  நோய்த்தாக்கங்கள் போன்ற காரணங்களால் இறால் வளர்ப்பை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக இறால் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு கணிசமானளவு வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது.

இந்நிலையில்,  நோய்த்தாக்கம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நக்டா அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், நக்டா, நாரா உயரதிகாரிகள், இறால் பண்ணையாளர்கள் மற்றும் இறால் குஞ்சு உற்பத்தி மையத்தின் பிரதிநிதிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் இறால் வளர்ப்பு சங்கப் பிரதிநிதிகள், கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர். – 24.11.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.