மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: அனைத்து ஆலோசனைகள், விவாதங்கள் முடிந்த பின்னர் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது என  உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, ‘அனைவருக்கும் பொதுவான  சிவில் சட்டம்’ பற்றி  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘‘பாரதிய ஜன சங்கம் காலத்தில் இருந்தே தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் பற்றி பாஜ கூறி வருகிறது. அரசமைப்பு சபையும் தகுந்த நேரத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஒரு மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது. தேசமும் நாடும் மதசார்பற்றது என்றால் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்கலாம்.
அரசமைப்பு சபையில் வழங்கப்பட்ட உறுதி மொழி காலப்போக்கில் மறக்கப்பட்டு விட்டது. பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் இதை ஆதரிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தேவை.

இதுகுறித்து வெளிப்படையான ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த வேண்டும். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியான  ஆலோசனைகள் முடிந்த பின்னர் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில்  அரசு உறுதியாக உள்ளது’’ என்ரு தெரிவித்தார்.

மேகாலயா முதல்வருடன் ஆலோசனை
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா இடையே முக்ரோ என்ற இடம்  உள்ளது. இரு மாநிலங்களின் எல்லையாக உள்ள இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன்  அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேகாலயாவை சேர்ந்த 5 பேர், அசாம் வனத்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர்  உயிரிழந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.