பிரபல ஓவியரை கொலை செய்த 49 பேருக்கு துாக்கு தண்டனை| Dinamalar

அல்ஜியர்ஸ், அல்ஜீரியாவில் ஓவியரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த 49 பேருக்கு தூக்கு தண்டனையும், 38 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் பிரபல ஓவியரான பென் இஸ்மாயில் சமூக சேவைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார்.

இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி என்ற இடத்தில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது.

அதை அறிந்து அங்கு சென்ற பென் இஸ்மாயில் அதில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, இஸ்மாயில் தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என வதந்தி பரவியது. இதையடுத்து, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்துக் கொலை செய்தது. மேலும் அவரது உடலை தீயிட்டு எரித்தது.

இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், 49 பேருக்கு துாக்கு தண்டனையும், 38 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

அல்ஜீரியாவில் கடந்த 1993ல் இருந்து துாக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது, ஓவியர் இஸ்மாயில் கொலை வழக்கில், 49 பேருக்கு துாக்கு தண்டனை வழங்கியிருப்பது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.