மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரிக்க உத்தரவு

மங்களூரு: மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு  சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில்  குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடும்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக,  நேற்று முன்தினம் கடிதம் எழுதியது. இதை ஏற்று, இந்த  வழக்கை என்ஐஏ விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உடனடியாக விசாரணை பொறுப்பை அது ஏற்றது.

இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை  விதித்துள்ளது. அந்த பட்டியலில் ஐசிஎஸ் அமைப்பும் உள்ளது.  ஐசிஎஸ்  பெயரில் இயங்கி வந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், இஸ்லாமிக்  ரெசிடன்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற பெயரில் இயங்கி வருமோ என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு ஐஆர்சி  பொறுப்பு ஏற்றுள்ளதால்,  இந்த சந்தேகம் மேலும் வலுபெற தொடங்கியுள்ளது.

மங்களூரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் முகமது ஷாரிக், ஐசிஎஸ் அமைப்பின் தென்மண்டல தலைமையிடமாக மாற்ற  கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் எல்லையில் உள்ள  வனப்பகுதியில் இடம் தேர்வு செய்ததாக விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதற்காக, 4  மாநில வனப்பகுதியில் உள்ள முக்கிய  இடங்களை வீடியோக்கள் எடுத்து, ஐசிஎஸ் அமைப்பின் தலைமைக்கு  அனுப்பி வைத்துள்ள தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாட்டிலைட் போன்
இந்தியாவில் சாட்டிலைட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மங்களூருவில்  நடந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு முன் கடலோர பகுதியில் உள்ள சில இடங்களில்  சாட்டிலைட் போன் பயன்படுத்தி இருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில்  தெரியவந்துள்ளது. கடந்த 19ம் தேதி குண்டு வெடித்த நிலையில், 18ம் தேதி மாலை  பண்ட்வால் வனப்பகுதியில் இருந்து சாட்டிலைட் போன் மூலம் வெளிநாடுகளில்  பேசி இருப்பது பதிவாகி உள்ளது. கடந்த 15 நாட்களில் மங்களூரு மாவட்டத்தில் 4 இடங்களில் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.