மற்ற மாநிலங்களை ஓரம் கட்டி அனைத்து திட்டங்களையும் குஜராத்துக்கு கொண்டு செல்லும் ஒன்றிய அரசு: இரண்டே மாதங்களில் ரூ.2.2 லட்சம் கோடி கொட்டியது

1995ம் ஆண்டில் இருந்து, இடையில் சுமார் ஒன்றரை ஆண்டு தவிர, இன்று வரை தங்களுக்கு ஈடுமில்லை இணையுமில்லை என்ற இருமாப்புடன் குஜராத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள பாஜவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருக்கிறது ஆம் ஆத்மி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் என எல்லாவற்றுக்கும் ‘குஜராத் மாடலை’ முன்னுதாரணமாகவும், தங்களின் முகவரியாகவும் காட்டி வந்த பாஜவின் முகத்தில் துடைப்ப கீறல்கள் ’முக வரிகளாக’ விழுந்து சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும், பிரதமர் மோடியின் பிரசாரத்தில் இந்த பதற்றம் வெளிப்படாமல் இல்லை. அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டது என்பதை பாஜவின் நகர்வுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. குஜராத் தேர்தல், பாஜவின் சுய கவுரவத்துக்கு விடப்பட்ட சவாலாகவே மாறிவிட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்ற உறுதியுடன், எல்லாச்சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்பதைப்போல, எல்லா நலத்திட்டங்களையும் குஜராத்தை நோக்கி காட்டாறு போல பாயவிட்டிருக்கிறது பாஜ. ஒன்றல்ல.. இரண்டல்ல… 13 திட்டங்கள். வெறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் இறுதி வரை இரண்டே மாதங்களில் ரூ.2.2 லட்சம் கோடியை அள்ளி வீசியிருக்கிறது பாஜ.

 பிற மாநிலங்கள் ஒன்றிய அரசின் திட்டம் தங்களுக்கு வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்தந்த மாநில முதல்வர்கள் சார்பிலும் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரதமராக இருந்தும், குஜராத் முதல்வர் போல மோடி செயல்படுகிறார். பிற மாநிலங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை. அந்த அளவுக்கு மற்ற மாநிலங்களை ஓரம் கட்டி விட்டு, குஜராத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்களை ஒதுக்கி வருகிறது.

 தமிழகத்தில் சென்னை அருகே மறைமலைநகரில் போர்டு நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டபோது, அதனை குஜராத்துக்கு செல்ல ஒன்றிய அரசு வழிவகுத்து விட்டது.  இந்தியா சர்வதேச பங்குச்சந்தை குஜராத்தில் அமைக்கப்பட்டது. இது மகாராஷ்டிராவுக்கு வர வேண்டிய திட்டம். இதுபோல் பிற மாநிலங்களுக்கு வர வேண்டிய திட்டங்களை பறித்து குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இதுபோல், மெரைன் போலீஸ் பயிற்சி மையமும் மகாராஷ்டிரா பால்கரில் இருந்து 2017ல் குஜராத்துக்கு சென்று விட்டது. டாடா ஏர்பஸ் திட்டம், மருந்து பூங்கா ஆகியவையும் மகாராஷ்டிராவுக்கு வர வேண்டியவைதான். இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் ஒன்றிய பாஜ அரசு  இருந்தபோது இப்படி பிற மாநில திட்டங்கள் குஜராத்துக்கு செல்லவில்லை. குஜராத்துக்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை.

குஜராத் அரசின்பழங்குடியினர் மேம்பாட்டு துறை புள்ளி விவரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த பழங்குடியினர் எண்ணிக்கையில் குஜராத்தில் மட்டும் 8.1 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது, ஏறக்குறைய 89.17 லட்சம் பேர். அதாவது, குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையில்  14.8 சதவீதம். மாநிலத்தின் பரப்பளவின்படி 5884 கிராமங்களில் 26 பிரிவுகளை சேர்ந்த பழங்குடியினர் வசிக்கின்றனர். குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் இவர்கள் அதிகம் உள்ளனர்.   எனவேதான், இவர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை பாஜ அறிவித்துள்ளது. என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் திட்டங்களை அறிவிப்பதும், முடித்த திட்டங்களை தேர்தல் நேரத்தில் திறந்து வைப்பதும் பாஜவின் வழக்கமாக காணப்படுகிறது. ஆனால் இத்தகைய ‘மோடி வித்தை’கள் குஜராத்தில் வாக்குகளை அள்ளித்தருமா? அல்லது இதனை மக்கள் உணர்ந்து கொண்டால் துடைப்பத்தால் பாஜ துடைத்தெடுக்கப்படுமா என்பதை தேர்தல் முடிவுகளில் தெரியும்.

மோர்பி பாலம் பாஜவின் கோலம்: மோர்பி தொங்கு பால விபத்தில் 135 பேர் இறந்து விட்டனர். இவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகையாக ரூ.4 லட்சம் மட்டுமே அறிவித்ததை நீதிமன்றமும் கண்டித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ரூ.12 கோடி பட்ஜெட்டில் வெறும் ரூ.2 கோடிதான் செலவு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளே இல்லாமல் மோர்பி நகராட்சியின் 52 வார்டுகளையும் பாஜதான் தக்க வைத்துள்ளது. மாநிலமும் பாஜவின் கையில்தான். இப்படி, பாஜ சின்னத்தில் ஆண்டாண்டு காலம் கைவைத்தவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்ட து என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ரூ.1.54 லட்சம் கோடி செமிகன்டக்டர் சிப்
குஜராத்தில் முதலாவது செமி கன்டக்டர் உற்பத்தி ஆலை திட்டம் குஜராத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக வேதாந்தா – பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்கிறது. அகமதாபாத் மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமையும். மகாராஷ்டிராவுக்கு போக வேண்டிய இந்த திட்டம், பாஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு கூட குஜராத்துக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

உத்தவ் ஆட்சியை கவிழ்த்து ஷிண்டே அணி – பாஜ கூட்டணி ஆட்சி அமைத்திருந்தபோதும், தேர்தல் வரப்போகிறது என்ற ஒற்றை காரணத்துக்காக மிகப்பெரிய திட்டத்தை மடைமாற்றி விட்டது கடும் விமர்சனத்தை எழுப்பியது. மகாராஷ்டிரா மட்டுமின்றி கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்ச் திட்டங்கள் மதிப்பு ரூ.7,000 கோடி
சர்தார் சரோவர் அணையுடன் இணையும் 357 நீள கட்ச் கால்வாய் சீரமைப்பு திட்டத்தை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இதன் திட்ட மதிப்பு ரூ.7,000 கோடி. 182 கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி,  948 கிராமங்கள் மற்றும் 10 நகர் பகுதிகளுக்கு குடிநீர் வசதி வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம்.
*  புஜ் பகுதியில், ஸ்மிருதி வான் நினைவு இல்லம் மற்றும் நில நடுக்க ஆய்வு மையம்.
காரணம்: சர்தார் சரோவர் திட்டம் பற்றி பிரதமர் அவ்வப்போது குறிப்பிட்டு வந்துள்ளார். இதன் மூலம் கிராமங்களுக்கு குடிநீர், பாசன வசதி கிடைக்கும் என உறுதி அளித்து வந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தனது வாக்கை காப்பாற்றி விட்டதாக உறுதிப்படுத்த, தேர்தலுக்கு முன்பு இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

பானக்‌ஷந்தா மாவட்டம், அம்பாஜி திட்ட மதிப்பு ரூ.7,200 கோடி

நியூ பலன்தரில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல, சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமேற்கத்திய காரிடார் சாலை அமைக்கப்பட உள்ளது.  இதுபோல், அம்பாஜி கோயிலில் உள்ள கோசாலைகளில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படும்.
காரணம்: வடக்கு குஜராத்தில் தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்த திட்டத்தை துவக்கியுள்ளார்பிரதமர் மோடி. மேலும், கால்நடை மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் மால்தாரி இனத்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்களை குளிரவைக்கவே கோசாலை மேம்பாட்டுக்கான திட்டத்தை மோடி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அகமதாபாத், காந்திநகர்திட்டங்களின் மதிப்பீடு ரூ.12,900 கோடி
*  நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் துவக்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  மும்பை சென்ட்ரல் – காந்திநகர் இடையே வந்தேபாரத் அதிவேக ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
காரணம்: குஜராத்தின் பெரும்பாலான நகர் பகுதிகளில் பாஜ பலம் வாய்ந்ததாக உள்ளது. இருப்பினும் இங்குள்ள நடுத்தர மக்கள் பலர் விலைவாசி உயர்வால் கவலை அடைந்துள்ளனர். பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத போதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இவர்களை தக்க வைக்க இந்த திட்டங்கள் உதவும் என பாஜ நம்புகிறது.

சூரத்
*  வைர ஆய்வு மற்றும் வணிக நகரம் (டிரீம்)திட்டத்தின் முதல் கட்ட பணிகள்.
*  அறிவியல் நகரில் புதிய மியூசியம், பல்லுயிர் பூங்கா 87 ஏக்கரில் அமைகிறது.
காரணம்: வைர நகரமான சூரத்தில்தான் ஆம் ஆத்மி கடந்த 2017ல் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் கால் பதித்தது. இந்த மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இவற்றை தன்வசப்படுத்த ஆம் ஆத்மி தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதை தடுக்கும் முயற்சியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

பாவ் நகர், சவுராஷ்டிரா. திட்டங்களின் மதிப்பு: ரூ.5,200 கோடி
*  பாவ்நகர் துறைமுகம் அருகே உலகின் முதல் இயற்கை எரிவாயு முனையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது அரசு மற்றும் தனியார் துறை மூலம் ரூ.4,000 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. குஜராத் பாவ்நகர் துறைமுகம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் சரக்குகளை கையாள்கிறது.
காரணம்: சவுராஷ்டிரா மண்டலத்தில் பாஜ வலுவானதாக இல்லை. பாவ் நகரில் அந்த அளவுக்கு மோசமாக இல்லை. இருப்பினும், ஆம் ஆத்மியிடம் பறிகொடுக்காமலும், ஊரக பகுதி வாக்குகளை ஈர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேஷானா திட்டங்களின் மதிப்பு ரூ.3,900 கோடி
பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, Modhera மோதேரா 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் சோலார் மூலம் மின் வசதி பெறும் நாட்டின் முதல்  கிராமமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 1,300 சோலார் கூரை கொண்ட மின் ஆலை நிறுவப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் மண்டலத்தில்  பட்டிடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக இங்குள்ள பெச்சார்ஜி தொகுதியை கடந்த 2017ல் காங்கிரசிடம் பாஜ பறிகொடுத்தது. இதன் விளைவால்தான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமோட், பாருச் மாவட்டம் திட்டங்களின் மதிப்பு ரூ.8,000 கோடி
*  ஜாம்புசாரில் மருந்துப் பூங்கா மற்றும் தாஹேஜில் ஆழ்கடல் குழாய் திட்டம், அங்கலேஷ்வர் விமான நிலையத்தின் முதற்கட்ட பணி, அங்கலேஷ்வர் மற்றும் பனொலியில்  பன்னோக்கு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
*  அங்கலேஷ்வர் விமான நிலையத்தின் முதற்கட்ட பணி, அங்கலேஷ்வர் மற்றும் பனொலியில்  பன்னோக்கு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
*  பரூச் நிலத்தடி நீர்வடிகால் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தாஹேஜ் கோயலி குழாய் திட்டம் உள்ளிட்ட குஜராத்தில் ரசாயன துறைக்கு ஊக்கமளிப்பதற்கான முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டன.
காரணம்: பாருச் பகுதியானது, காங்கிரஸ் தலைவர் அமகத்படேலின் கோட்டை. மேலும், இங்கு பழங்குடியினர் அதிகம் உள்ளனர். 18 சதவீத வாக்கு வங்கி உள்ளது. இவர்களை இழுப்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனாகாத் மற்றும் போர்பந்தர் திட்டங்களின் மதிப்பு ரூ.3.580 கோடி
*  கடலோர நெடுஞ்சாலைகள், கழிவுநீர் மற்றும் குடிநீர் திட்டங்கள்.
*  மீன்பிடி துறைமுகம்.
காரணம்: மீனவ சதுதாயத்தினர் பலர் ஓபிசி பிரிவில் உள்ளனர். இந்த வாக்கு வங்கி பாஜ மற்றும் காங்கிரசுக்கு கணிசமாக பிரிகிறது. இவர்களை தங்கள் பக்கம் முழுமையாக ஈர்க்க இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜாம் நகர் திட்டங்களின் மதிப்பு ரூ.1,450 கோடி
*  குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரூ.1450 கோடி மதிப்பில் நீர்ப்பாசனம், எரிசக்தி, தண்ணீர் விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு சம்பந்தமான பல்வேறு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
*  சவுராஷ்ட்ரா அவதரன் நீர்ப்பாசன திட்டம் இணைப்பு 3-இன் 7-ஆம் தொகுப்பு, இணைப்பு 1-இன் 5-ஆம் தொகுப்பு மற்றும் ஹரிப்பார் 40 மெகாவாட் சூரிய மின்சக்தி தகடுகள் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
*  இதுபோல், குஜராத்தில் ஜாம்நகரில் ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிலையம் இன்றைக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்படுகிறது.
காரணம்: இந்த பகுதி காங்கிரசின் கோட்டையாக இருக்கிறது. எனவே, எப்படியும் தங்கள் வசம் தொகுதியை இழுத்து விட வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அகமதாபாத் திட்டங்களின் மதிப்பு ரூ.1,275 கோடி
* அகமதாபாத் அசர்வாவில் மருத்துவமனையில் ரூ.1275 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதார வசதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
* இதுபோல், ஏழை மாணவர்களுக்கான கல்வி வளாகத்தையும் திறந்து வைத்தார்.
காரணம்: இந்த திட்டங்கள் குறைந்த வருவாய் கொண்ட ஏழைகளுக்கான திட்டங்களாகும். மேலும், சுகாதாரம், கல்வி ஆகியவை ஆம் ஆத்மியின்தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளன. இதற்கு பதிலடியாகவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

காந்திநகர் திட்டங்களின் மதிப்பு ரூ.4,260 கோடி
* ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி மையங்கள் உட்பட கல்வித்துறைக்கான உள் கட்டமைப்பு வசதிகள்.
காரணம்: ஆம் ஆத்மி தரமான கல்வியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜ்காட் திட்டங்கள் மதிப்பு ரூ.5,860 கோடி
*  குடிநீர் சப்ளை திட்டங்கள், தொழிற்பேட்டை அமைதல்.
*  பாலங்கள் மற்றும் இதர சாலை திட்டங்கள்.
*  உள் விளையாட்டு அரங்குகள், மண்டல அறிவியல் மையம்.
காரணம்: இந்த பகுதி பாஜவின் கோட்டையாக உள்ளது. ஆனால், ஆளும் கட்சி மீதான அதிருப்தியால் வாக்குகளை இழக்கலாம் என்பதால், இதனை தக்க வைக்கும் வகையில், நகர மற்றும் புறநகர் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

வியாரா மற்றும் நர்மதா மாவட்டங்கள் திட்டங்களின் மதிப்பு ரூ.1,970 கோடி
*  குடிநீர் சப்ளை திட்டங்கள்.
*  சாபுதாரா முதல் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலை வரையிலான சாலை மேம்பாட்டு திட்டம்.
காரணம்: இந்த பகுதியில் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். இவர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு செல்கின்றன. இதை தடுக்க மேற்கண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.