ஈரோடு: கழிவுநீரால் செந்நிறமாக மாறிய குளம்; அமைச்சர் ஆய்வு… மூடப்பட்ட இரும்பு உருக்காலை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலுள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுக்காட்டுவலசு, கடப்பமடை, காசிபில்லாம்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைக்காட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்த விவசாய நிலங்களில் 2,800 ஏக்கர் நிலங்கள் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1994-ம் ஆண்டில் கையகப்படுத்தபட்டது. இதைத் தொடர்ந்து சிப்காட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விதமான நிறத்தில் தொழிற்சாலை இயக்கப்படுகின்றன. அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ள சிவப்பு நிற குறியீடு கொண்ட சாய ஆலை, துணி ஆலை, தோல் தொழிற்சாலை, இரும்பு உருக்கு ஆலை, கண்ணாடி ஆலை, டயர் தயாரிப்பு ஆலை, பேட்டரி தயாரிப்பு ஆலை, மெத்தை தயாரிப்பு ஆலை, எரிவாயு உருளை தயாரிப்பு ஆலை, சிமென்ட் குழாய் தயாரிப்பு, பிளாஸ்டிக் குழாய் தயாரிப்பு ஆலை என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பூஜ்ஜியம் முறையில் கழிவுகள் வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதாவது தொழிற்சாலையின் கழிவுநீரை ஒரு துளியும் வெளியேற்றக்கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

செங்குளம்

இந்த நிலையில், செங்குளம் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனங்களான பெரிக்ஸ் பெராக்சைடு, குளோரோக்சைடு போன்றவற்றைப் பயன்படுத்தி இரும்பை உருக்கும்போது வரும் கழிவுகளை மழைநீருடன்  திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள நான்கரை ஏக்கர் பரப்பளவு குளத்தில் தேங்கி நீர் சிவப்பு நிறமாக மாறியது. இந்தக் குளம் நிரம்பியதால் ரசாயனம் கலந்த தண்ணீர் அக்கம் பக்கத்திலிருந்த சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்தது. மேலும் இந்த கழிவுநீரை அருந்திய ஆடு, மாடுகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குளத்தில் தேங்கிய கழிவுகளை ஆய்வு செய்து மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த கழிவுநீர்ப் பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் புகாரையடுத்து நேற்று இந்தப் பகுதியில் ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாசுக்கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் மண்டல  பொறியாளர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் அந்தக் குழு அளித்த புகாரின்பேரில் இந்த இரும்பு உருக்காலையை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும் ஆலையின் மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் செங்குளம் பகுதியில் சிவப்பு நிறத்தில் தேங்கி நின்ற தண்ணீரையும், குளத்தையொட்டி இருந்த விவசாய நிலங்களையும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெருந்துறை சிப்காட் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் முறையாக இயங்க வேண்டும். தொழிற்சாலைகள் முறையாகச் செயல்படாமல் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. செங்குளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செங்குளத்தில் ரசாயன கழிவுநீர் கலந்துள்ளதால் குளத்து நீர் பாதிப்படைந்துள்ளது. இந்தப் பகுதி மக்கள் பெருமளவில் விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்த கழிவுநீர்ப் பிரச்னையால் விவசாயம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து தொழிற்சாலைகள் இது போன்ற கழிவுநீரை வெளியேற்றி வந்தால் விவசாயத்தொழில் முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாகும். எனவே அரசு அலுவலர்கள் தொழிற்சாலையின் நிறுவன மேலாளர்களுடன் கலந்து பேசி இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முறையாகச் செயல்படாமல் கழிவுநீரை நீர்நிலைகளில் கலக்கச் செய்யும் தொழிற்சாலைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், செங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விளைநிலங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடும் வழங்கப்படும்” என்றார்.

ஆய்வின்போது ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உதயகுமார், சென்னிமலை ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோ உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.