மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா?

மூலிகை சூப்

தேவையானவை:

எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன்

அரைக்க:

தூதுவளைக் கீரை – அரை கப்

அப்பக் கோவை இலை – அரை கப்

முசுமுசுக்கு இலை – 6

துளசி இலைகள் – 4

வெல்லம் – ஒரு சிட்டிகை

கற்பூரவல்லி இலை – ஒன்று (பெரியது)

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகு – 10

மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று (சிறியது)

கறிவேப்பிலை – 6 இலைகள்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

மூலிகை சூப்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக, ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பருகவும்.

குறிப்பு:

இது, மருத்துவக் குணம் உடைய சூப். சளி, இருமல், சோர்வு, வாய்வு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்; ஜீரண சக்தி அதிகரிக்க உதவும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:

பிரண்டைத் துண்டுகள் – 6 – 8 கணு (துண்டுகள்)

புளி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்)

பூண்டு – 4 பல்

கடுகு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பிரண்டைத் துவையல்

செய்முறை:

பிரண்டையை முருங்கைக்காய் துண்டு நீளத்தில் நறுக்கி, லேசாகச் சீவிக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாகக் கழுவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

இதனுடன் பிரண்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:

1) பிரண்டைத் துவையல் பசி, ருசி உணர்வைத் தூண்டும். வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

2) பிரண்டையை நன்றாக வதக்காவிட்டால் சாப்பிடும்போது தொண்டையில் அரிப்பு ஏற்படும்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை:

புளி – பெரிய எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கறிவேப்பிலை – அரை கப்

துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

பச்சரிசி – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

தோலுரித்த சின்ன வெங்காயம் – 6 (இரண்டாக நறுக்கவும்)

பெரிய தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கறிவேப்பிலை குழம்பு

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாக வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது உப்பு, புளிக்கரைசல் ஊற்றி (தேவையானால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) நன்கு கொதிக்கவிடவும். கெட்டியான குழம்புப் பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

1) இது மூன்று நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

2) கறிவேப்பிலை செரிமானம், முடி வளர்ச்சியைத் தூண்டும்; வாய்ப்புண், கொலஸ்ட்ரால், நீரிழிவுக்கு மருந்தாகும்.

ஹெர்பல் பாஸ்தா

தேவையானவை:

குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் கலவை – ஒரு கப்

பூண்டுப் பல் – 2 (தட்டவும்)

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கொரகொரப்பாகப் பொடித்த காய்ந்த மிளகாய் (Chilli flakes) – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பாஸ்தா செய்ய:

பாஸ்தா – 250 கிராம்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க:

க்ரீம் – தேவையான அளவு

வெங்காயத்தாள் – சிறிதளவு க்ரீன் மசாலா செய்ய:

துளசி இலைகள் – 10

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடியளவு

பூண்டுப் பல், பாதாம் – தலா 6

ஓரிகானோ – கால் டீஸ்பூன்

பார்ஸ்லே – ஒரு கைப்பிடி அளவு

மிளகு – 6

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

ஹெர்பல் பாஸ்தா

செய்முறை:

க்ரீன் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தா சேர்த்து வேகவிட்டு இறக்கி வடிக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி பூண்டு, பொடித்த காய்ந்த மிளகாய், காய்கறிகள் சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வெந்த பிறகு அரைத்த க்ரீன் மசாலா, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு பாஸ்தாவைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே க்ரீம், வெங்காயத்தாள் தூவி அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.