மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்க கூடாது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்கக் கோரியும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகள் குறைவான நேரம் திறக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, விற்பனையில் தமிழகம் தான் பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

அப்போது, கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் இருந்து மது வாங்கி வந்ததற்கான ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகி உள்ளது. மது பிரியர்கள் மாற்று வழியையே யோசிக்கிறார்கள். மேலும், 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மாணவர்களுக்கு 100 சதவீதம் மது விற்பனை செய்யப்படுவதில்லையா? பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா? 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.