“மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு வாக்குறுதி என்ன ஆனது?” – சீமான் கேள்வி

சேலம்: ”தேர்தல் நேரத்தில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?” என்று அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம், மணக்காட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிக்கு ஆதரவாகவும், இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சீமானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராகாத நிலையில், நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சீமானுக்கு, பிடிவாரன்ட் உத்தரவு தளர்த்தப்பட்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. அடுத்த வாய்தா வரும் ஜனவரி 3-ம் தேதிக்கு சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: ”மக்கள் நலனில் எவ்வித முடிவும் எடுக்காத நிலை நீடிப்பதால்தான் ஆளுநர் நமக்கு தேவையில்லை என்கிறோம். மக்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்தும், அதில் ஆளுநர் கையெழுத்திட தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம். இந்த ஆளுநர் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்பதையே வலியுறுத்தி வருகிறோம்.

நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடு மொழியாக கொண்டு வரவில்லை. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை, பிறகு எப்படி தமிழை வளர்ப்பார்கள். கோழிக்கு அதன் பாஷையில் பேசி இரை போட்டு பிடித்து அறுத்து வறுப்பது போல, தமிழ் மொழியில் பேசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிகள் வேண்டுமானால் மாறலாம். இலவசமோ, ஊழலோ மாறுவதில்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு செய்தால் அதற்கும் மேல் நாங்கள் செல்வோம். எங்களுக்கு சட்ட போராட்டம் நடத்த தெரியும்.

பாஜக யாருடயை காலடியிலாவதுதான் நிற்கும். ஆனால், அதிமுக அவ்வாறு நிற்காது. பாஜக பெரிய கட்சி என்று கூறுகிறார்களே, அப்படியென்றால், வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுமா என்று கூற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கிறோம். ஆனால், திமுக இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்த இல்லம் தேடிக் கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது. திமுக எட்டு வழிச்சாலையை எதிர்த்தது. ஆனால், தற்போது, பயண நேரம் குறைப்பு சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை வேறு ஏதோ இடத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போல, குறிப்பிட்ட தேதியில் மதுரையில் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என வாக்குறுதி அளித்து கூறிய திமுக, தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை. மின்சார இணைப்புக்கு ஆதார் எண் தேவையில்லாதது. அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்றால், மற்ற ஆவணங்கள் எதற்கு எனத் தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும். ஏன், சிங்கப்பூராகவே மாறிவிடும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.