விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் மகள்| Dinamalar

சியோல் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், மீண்டும் தன் மகளுடன் பொது இடத்தில் தோன்றியது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவைப் பற்றி வெளி உலகிற்கு எந்தத் தகவலுமே கசியாது. இங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜோங் உன், தன் நாட்டை ஒரு மர்மப் பிரதேசமாக வைத்துள்ளார்.

நாட்டை மட்டுமின்றி தன் குடும்பத்தைப் பற்றியும் கூட எந்தத் தகவலையும் வெளியிட்டது இல்லை. ஆனாலும், அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருப்பதாக தென் கொரிய செய்தி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதளத்துக்கு தன் இரண்டாவது மகள் ஜூ அய்-, 10, உடன் கிம் ஜோங் உன் வந்தார்.

மேலும், கிம் ஜோங் உன்னும், அவரது மகளும் நிற்கும் புகைப்படத்தை, வட கொரியாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ., வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்து, சோதனையையும் வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுடன் நேற்று, அதிபர் கிம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, அவரது இரண்டாவது மகளான ஜூ அய் வந்திருந்தது மட்டுமின்றி, விஞ்ஞானிகளூடன் சேர்ந்து தந்தையும், மகளும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட ஆச்சர்யத்தில் இருந்து மீள்வதற்குள், கிம் அடுத்த ஆச்சர்யத்தை நேற்று உலக நாடுகளுக்கு அளித்துள்ளார். மேலும், தன் இரண்டாவது மகள் ஜூ அய் மீது, கிம்முக்கு அதீத பாசம் உள்ளதாகவும், தன் அரசியல் வாரிசாக அவளை தயார் படுத்தவே சிறுவயதிலேயே களம் இறக்கியுள்ளார் என்றும் பரபரப்பான விவாதங்கள் உலக அளவில் துவங்கி விட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.