ஆதி திராவிடர் பள்ளிக்கான சிறப்பு நிதி; ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு மட்டும்தானா?

பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை உருவாக்கி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு

அந்த வகையில், தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1431 பள்ளிகளில், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க மாணவர்களின் அறிவுத் திறன், தேர்ச்சி விழுக்காடு, சுத்தம், சுகாதாரம் பேணுதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த ஒரு மேல்நிலைப் பள்ளி அல்லது பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்து, அப்பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்திட ரூ. 5,00,000 வழங்குதல் என்ற திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு 2016-ல் அரசாணை வெளியிட்டது.

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆர்.டி.ஐ-ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக் நம்மிடம் பேசும்போது, “இத்திட்டம் குறித்து ஆர்.டி.ஐ-ல் நான் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த தகவல்களில் கடந்த 2017-18 கல்வி ஆண்டில் சிவகங்கை மாவட்டம் மல்லல் மேல்நிலைப்பள்ளி, 2018-19-ல் திருநெல்வேலி மாவட்டம் நல்லம்மாள்புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2019-20-ல் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2020-21-ல் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி மேல்நிலைப்பள்ளி, 2021-22-ல் திருச்சி மாவட்டம் துலையாநத்தம் மேல்நிலைப்பள்ளி என மொத்தம 5 பள்ளிகள் மட்டுமே இதுவரை இந்த சிறப்பு நிதியை பெற்றுள்ளன.

கார்த்திக்

தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஒரு பள்ளி கூட இத்திட்டத்தில் பயன்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 33 மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்தால் கடைசியாக இடம்பெறும் மாவட்டம் இந்த நிதியைப் பெற 33 வருடங்கள் காத்திருக்க வேண்டும். மாநில அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்வதால்தான் இந்தப் பிரச்னை.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும். இதனால் மாவட்டங்களுக்கிடையே ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ஆரோக்கியமான போட்டியாகவும் அமையும். ஒவ்வொரு பள்ளியும் சிறப்பாக செயல்படும்.

பயனடைந்த பள்ளிகள் பற்றிய தகவல்

இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 90 லட்சம் மட்டுமே செலவு ஏற்படும். ஒவ்வோர் ஆண்டும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், பலநூறு கோடி ரூபாய் பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்குத் திரும்ப செல்கிறது. இந்த நிதியில், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் மட்டும் கூடுதல் செலவு ஏற்படும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசிற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இதை கருத்தில்கொண்டு அரசு ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு சிறப்பு நிதி அளிக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். இதையே அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தெரிவித்து வருகிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.