சட்டையை கிழித்துக்கொண்டு ஸ்டாலின் ஓடிய இடம்.. கனிமொழிக்கு அண்ணாமலை பதில்..!

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சட்டசபையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் சட்டையை கிழித்துக்கொண்டு அங்கிருந்து முதலில் ஓடி வந்தது ஆளுநர் மாளிகை தான் என்பதை கனிமொழி உணர்ந்துகொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ராஜ்பவனில் இன்று ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘ஆளுநர் பதவியே காலாவதியான பதவி என்று திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறாரே..’ என்று, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “அக்கா கனிமொழி அவர்கள் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அவருடைய சகோதரர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சட்டசபையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் சட்டையை கிழித்துக்கொண்டு அங்கிருந்து முதலில் ஓடி வந்தது ஆளுநர் மாளிகை தான்.

இந்த விமர்சனத்தை அப்போது கனிமொழி வைத்திருக்க வேண்டும். அவருடைய தந்தையார் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இருந்த ஆளுநர் பற்றி பேசினார், பஞ்சாப் சிங்கம். இது போன்ற ஒரு ஆளுநர் இந்தியாவுக்கு வேண்டும் என்று சொன்னார். கனிமொழி பழைய சரித்திரத்தை பார்த்து பேச வேண்டும்.

இப்போது ஆட்சியில் இருக்கோம், ஆளுநர் என்பது ஒரு நியமன உறுப்பினர், எங்களிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது, எந்தவிதமான அடாவடியும் செய்வோம், கேட்பதற்கு காரணம் இருக்கக் கூடாது என்பதற்காக வாயை மாத்தி பேசி, பேசக்கூடிய வார்த்தைகளையும் மாற்றி பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..?. கனிமொழி ஒரு நல்ல அரசியல்வாதி. அவர் அரசியல் நிர்பந்தத்துக்காக பேசாமல் உண்மையை பேச வேண்டும். கலைஞர் கருணாநிதி, ஆளுநரை பற்றி என்ன சொன்னார்.

இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை ஆளுநரை வந்து பார்த்தார்கள். பெட்டி பெட்டியாக பண்டல் பண்டலாக ஊழல் புகாருடன் ஆளுநர் அலுவலகத்தில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் குடியிருந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில் டென்ட் போட்டு தான் உட்கார்ந்திருந்தார். ஆனால் இன்றைக்கு அவர்கள் மாற்றி பேசுவது வேதனையாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.