ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர்: அரியலூரில் சூப்பர் சம்பவம்!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக்குக்கு குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர்

வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.11.2022) 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் இல்லத்திற்கு நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள அரியலூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் குடும்ப உறுப்பினர்கள், தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தங்களின் மகன் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகள் வேண்டியும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை தொடர்பு கொண்டு கார்த்திக் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்திட அறிவுறுத்தினார்.

கார்த்திக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை வழங்கினார்.

முன்னதாக, இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் எஸ். கார்த்திக்குக்கு 10 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சரால் 24.11.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.