மருத்துவமனை பெயர் விவகாரத்தில் யசோதா படக்குழு சுமூக முடிவு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா என்ற திரைப்படம் வெளியானது. இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரீஷ் சங்கர் இயக்கியுள்ள இந்தப்படம் தற்போது மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட வாடகைத்தாய் விவகாரத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் வாடகைத்தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தன. அதேசமயம் படத்தில் காட்டப்பட்ட மருத்துவமனையின் பெயரிலேயே நிஜமான மருத்துவமனை இருப்பதும் அதற்கு பல இடங்களில் கிளைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர், யசோதா படத்தில் தங்களது மருத்துவமனை பெயரை களங்கப்படுத்தும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்தப்படத்தில் இருந்து தங்களது மருத்துவமனை பெயர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மற்றும் படத்தை டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த விஷயத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதுகுறித்து அவர்கள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இப்படி தாங்கள் கதைக்காக மருத்துவமனைக்கு வைத்த பெயரிலேயே நிஜமாகவே ஒரு மருத்துவமனை இருப்பது தங்களுக்கு தெரியாது என்றும் வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் காட்சிகளை அமைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல உடனடியாக படத்தில் கிட்டத்தட்ட 80 காட்சிகளில் இடம் பெற்றுள்ள அந்த மருத்துவமனையின் பெயரே தெரியாமல் மறைக்கவும் அந்தப்பெயர் உச்சரிக்கப்படும் இடங்களில் சவுண்டை மியூட் செய்யவும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

மேலும் இன்னும் ஒரு வாரத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் யசோதா படத்தின் பிரதிகள் மாற்றப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய படம் திரையிடப்படும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, அதற்காக ஒரு வார கால அவகாசமும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களுக்கு கொடுக்கப்படும் பிரதியிலும் மருத்துவமனை சம்பந்தப்பட்ட பெயர் எந்த இடத்திலும் காட்டப்படாது என்றும் உறுதி அளித்துள்ளார்களாம் இந்த தொழில்நுட்ப ரீதியாக இந்த மாற்றங்களை செய்ய ஏற்பாடு கால அவகாசத்தை உணர்ந்து மருத்துவமனை நிர்வாகமும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.