முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற எல்லை மீள் நிர்ணய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற  எல்லை மீள் நிர்ணய கலந்தரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணய அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்தில் தேசிய எல்லை நிர்ணய குழுவினால் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணயத்தில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படும்.

குடிசன மதிப்பீட்டு திணைக்களம் 2020ம் ஆண்டு மேற்கொண்ட மதிப்பீட்டளவிலான சனத்தொகை தரவுகளை கவனத்திற் கொள்ளுமாறு மாவட்ட எல்லை நிர்ணயக்குழுக்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களை சுமார் நான்காயிரம் வரை குறைப்பதற்கான பரிந்துரை முன்வைத்துள்ளது.

இதற்காக தேசிய எல்லை மீள் நிர்ணயக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் சட்டத்திற்கமைய மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர்களின் தலைமையில் உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்குழுக்கள் அந்தந்த மாவட்டங்களின் எல்லை நிர்ணய பணிகளை முன்னெடுத்துவருகின்றன.. இக்குழுவில் நில அளவைத்திணைக்களம், புள்ளி விபரத்திணைக்களம், தேர்தல் திணைக்களம், உள்ளூராட்சி மன்ற திணைக்களம் என்பன இடம்பெற்றுள்ளன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்ரன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன், நில அளவை திணைக்கள சிரேஷ்ட நில அளவை ஆணையாளர் பி.சிவாநந்தன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன்,,பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளுர் சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.