வறுமை ஒருபக்கம்..நோயால் அவதியுறும் இரு பெண் குழந்தைகள் மறுபக்கம்.. பரிதவிக்கும் தாய்

பெரம்பலூர் அருகே தனது இரண்டு பெண் குழந்தைகளும் கல்லீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வறுமையின் காரணமாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாமல் தவிக்கிறார் பானுமதி என்ற ஏழைத் தாய்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி யை சேர்ந்த பானுமதி-குமார் தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. மூத்த குழந்தைக்கு 10 மாதத்திலும், இரண்டாவது குழந்தைக்கு 12 மாதத்திலும் கல்லீரல் வீக்கம் எனும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தைளுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சென்னை என பல்வேறு ஊர்களில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நோயை தீர்க்க முடியாது; ஆனால் அதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் அதற்கான மாத்திரைகள் தனியார் மருத்துவமனைகளில் தான் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார் பானுமதி.

image
பார்ப்பது கூலி வேலையாயினும் குழந்தைகளை காப்பது கடமை என கருதிய பானுமதி தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை 600 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே உதவியாய் இருந்த கணவர் குமாரும் குடல் இறக்க, நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று கூலி வேலைக்கு போகமுடியாமல் சூழ்நிலை ஏற்பட திகைத்துப் போயுள்ளார் பானுமதி. அதன்பிறகே கிடைக்கும் கூலியில் குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் உணவுக்கே போதவில்லை என்ற போது மருந்து, மாத்திரைக்கு வழிதெரியாமல் வலியோடு காலத்தை கடத்துகிறார். மாத்திரை உட்கொள்ளாததால் நிஷா(15), தாரணிகா(6) என்ற பானுமதியின் இரண்டு பெண் குழந்தைகளும் தற்போது அவஸ்தையை சந்திக்க தொடங்கியுள்ளனர். சிறிது உணவு உட்கொண்டாலே ஏற்படும் வயிறு உப்பல், அவ்வப்போது வரும் வலிப்பு நோய் என இரண்டும் அவர்களை பாடாய் படுத்துகிறது. கண்முண்ணே குழந்தைகள் படும் அவஸ்தையை அறிந்தும் அதை வறுமையின் காரணமாக தீர்க்க முடியாமல் தவிக்கும் பானுமதி, அரசு தொடர் சிகிச்சைக்கு உதவ வேண்டுமென கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

image
இந்த நோய் பாதிப்பு தொடர்பாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை மூத்த மருத்துவர் அர்ச்சுனனிடம் கேட்ட போது, அந்த இரண்டு சிறுமிகளுக்கும் குழந்தைகள் நல மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும், தங்களிடம் மருந்து மாத்திரை இல்லாவிடில் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து தொடர்ந்து பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். வறுமையையும், நோய் நொடியையும் ஒரு அனுபவிக்கும் இந்த கொடுமை விரைந்து தீர்க்கப்பட வேண்டும். காண்போர் நெஞ்சத்தை கலங்கவைக்கும் ஏழைத்தாய் பானுமதியின் கண்ணீரை துடைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.